Tik Tok என்னும் எமன்!

மூன்றாம் உலகப் போர் வருமா..? தெரியாது. ஆனால், அப்படி வந்தால் அதற்கான காரணமாக பலரும் பலதைச் சொல்லலாம். என்றாலும் எல்லோரும் சுட்டிக்காட்டுவது ஒன்றே ஒன்றைத்தான். அது, டெக்னாலஜி. குறிப்பாக சமூக வலைத்தளங்கள் வழியாக திரட்டப்படும் தகவல்கள்.

இந்தியப் பிரதமர் முதல் அமெரிக்க அதிபர் வரை, யார் என்று தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக இன்று சமூக வலைத்தளங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.

இப்படி முக்கியத்துவம் பெற்றிருக்கும் சமூக வலைத்தளத்தின் ஓர் அங்கமாக உருப்பெற்றிருக்கிறது ‘டிக் டாக்’ என்னும் செயலி. வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கியதாக இருந்தாலும், மக்கள் மத்தியில் இந்த செயலி பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

டிக் டாக் எனப்படும் மியூசிக் செயலியில் பாடல்கள், வசனங்களுக்கு ஏற்ப அசைவுகள் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், வீட்டில் இருப்போர் என வயது வித்தியாசம் பாராமல் ஏதோ ஒரு விதத்தில் டிக் டாக்குக்கு அடிமையாகியுள்ளனர்.

பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தாலும், சிலரின் வீடியோக்கள் ஆபாசமாகவும், அபாயமானதாகவும் உள்ளன. இவற்றைத் தணிக்கை செய்வதற்கான சட்டங்கள் எதுவும் நடைமுறையில் இல்லாததால் கட்டுப்பாடின்றி செயல்பட்டு வருகின்றன.ஒரு காலத்தில் பிரபலமானவர்கள், புகழ் பெற்றவர்கள் என்றால் அவர்கள் சினிமா, விஞ்ஞானம், அரசியல் பிரமுகர், தலைவர்கள், ஒரு குறிப்பிட்ட துறையில் சாதித்தவர்கள்… என்றிருந்தார்கள்.  

ஆனால், இன்று டிக் டாக் போன்ற செயலிகள் மூலமாக பிரபலமானவர்களும் புகழ்பெற்றவர்களும் உருவாக ஆரம்பித்துவிட்டார்கள்.  

இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட நாட்டில் இதன் பயன்பாடு நகரங்களை விட கிராமப் புறங்களில் அதிகம் என்கிறது ஆய்வு.

கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் மேடையாக இதைப் பார்க்கிறார்கள். ஆனால், எந்தளவுக்கு இந்த மேடையை ஆக்கபூர்வமாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்வி.

சீனா நடத்தும் சைபர் தாக்குதலா?

சீன நாட்டுச் செயலியான இந்த டிக் டாக்கை  பயன்படுத்தும்போது, செல்போன் ஸ்கிரீனில் ஆபாச வீடியோ குறித்த விளம்பரம் வருகிறது. அதை கிளிக் செய்து உள்ளே செல்பவர்களுக்கு தொடர்ந்து ஆபாச வீடியோக்கள் அனுப்பப்படுகின்றன.பாடலுக்கு ஏற்ப அசைவுகள் செய்வது மட்டும்தானே என்ற மனநிலையில் இருக்கும் இளைஞர்களைத் தொடர்ந்து வரும் ஆபாச வீடியோக்கள் மற்றொரு பாதைக்கு அழைத்துச் செல்கின்றன.

 வளரும் நாடுகளில் உள்ள மனித வளங்களைச் சிதைக்கும் வேலையாக இது அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு உலகம் முழுக்க முன்வைக்கப்படுகிறது.

அமெரிக்காவின் சி.எஃப்.ஐ.யு.எஸ் (அந்நிய நிதி மக்கள் பாதுகாப்புக்குழு), டிக் டாக் செயலி குறித்த நாடு தழுவிய ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளது இதன் காரணமாகத்தான்.

இத்தனைக்கும் டிக் டாக் செயலி உலகில் அறிமுகமாகி மூன்றே ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்குள் தனி மனித வாழ்வில் அந்த செயலி நிகழ்த்தியிருக்கும் தாக்கம் இதுவரை உலகம் பார்க்காதது; அறியாதது; எதிர்கொள்ளாதது.பல்வேறு சமூக வலைத்தளங்களில் இணைக்கப்பட்டுள்ள டிக் டாக் ஆப்கள், ‘உங்கள் நாளை உருவாக்குங்கள், உண்மையான மக்கள், உண்மையான வீடியோக்கள்’ என்று முத்திரை வாக்கியங்களை முன்னிறுத்தி பயனர்களை தன்னுள்ளே இழுத்து வருகின்றன.

விளைவு, அமெரிக்காவில் மில்லியன் கணக்கான டீன் ஏஜ் பயனர்கள் மற்றும் இளைஞர்களிடையே டிக் டாக் மோகம் சுனாமியாக புரட்டிப் போடுகிறது. இதனை நிச்சயம் நேர்மறையாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கருதியதாலேயே அமெரிக்க அரசு இப்போது டிக் டாக் ஆய்வை மேற்கொண்டுள்ளது.

வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே இதுதான் நிலை என்றால்... வளரும் நாடான இந்தியாவின் - இந்திய இளைஞர்களின் - நிலையை யோசித்துப் பாருங்கள் என்கிறார்கள் சமூகவியல் அறிஞர்கள். இதுகுறித்து டிக் டாக் உரிமையாளர் பைட் டான்ஸ், ‘‘இப்போது அமெரிக்காவில் கொண்டு

வரப்பட்டுள்ள விசாரணைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. அமெரிக்கப் பயனர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கே இப்போது முன்னுரிமை வழங்கியிருக்கிறோம்...’’ என்று சொல்லியிருக்கிறார்.

2017ம் ஆண்டு Musical.ly-யை வாங்கி அதை டிக் டாக்குடன் இணைத்திருக்கும் பைட் டான்ஸ், தனது செயலி இளைஞர்களின் வாழ்க்கையைக் கெடுக்கவில்லை என்று அடித்துச் சொல்கிறார்.

டிக் டாக்  மனநிலை

நடிகைகள் கூட நடிக்க வெட்கப்படும் ஆபாசக் காட்சிகளில் எந்தவித கூச்சமும் இன்றி சில இளம்பெண்கள் உடல் அசைவுகளை ஆபாசமாகக் காட்டி நடித்து வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். படுக்கை அறை முதல் கழிவறை வரை மறைவாகச் செய்யும் செயல்கள் எல்லாம் சாகசங்களாக டிக் டாக் வழியே முன்வைக்கப்படுகின்றன. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு உள்ளது இதில் பதிவு செய்யப்படும் வீடியோக்கள்.

இதற்குக் காரணம், இது போன்ற செயலிகளா அல்லது மக்களின் மனநிலையா என்று ஆராய வேண்டியுள்ளது. இதனால், குடும்பங்களில் பிரச்னை ஏற்படுவதோடு, குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளன.குறிப்பாக டிக் டாக் செயலியைப் பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது.

இன்னும் சிலர் தங்களின் பெருமையைக் காட்டிக் கொள்வதற்காகவே சாதி, மத, அரசியல் உள்ளிட்ட காட்சிகளை வீடியோ எடுத்து அனுப்பி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.இப்படி வெளியிடப்படும் ஆபாச - சர்ச்சைக்குரிய வீடியோக்களை ஆயிரக்கணக்கானோர் பகிர்வதாலும், லைக்குகள் குவிவதாலும் இதை ஆஸ்கார் விருது எனக்கருதி முழு நேரமும் இதில் சிலர் சிக்குகின்றனர்.

திறமைக்கு தளம் அமைத்துக் கொடுக்கிறதா?

நீதிமன்றங்களும், அரசும் டிக் டாக் செயலியைத் தரவிறக்கம் செய்வதற்குத் தடை விதிக்கலாம் என்றது. உண்மையில் இது சமூக சீர்கேடா, பிரச்னைகள் வருகிறதா, இல்லை நன்மைதானா என்ற கேள்விகளோடு பலர் தங்களது திறமையை வெளிக்காட்டுவதற்கான தளமாக இது அமைந்துள்ளது என்று கூறுகிறார்களே? அதுவும் உண்மைதானா என்று பார்க்க வேண்டியுள்ளது.

15 செகண்ட் வீடியோவில் ஆங்கில வாக்கியம் ஒன்றைக் கற்றுக்கொடுப்பது, அறிவியல் தொடர்பான விஷயங்களை ஜாலியாக கிரியேட்டிவ்வாக விளக்குவது, ஃபிட்னஸ் டிப்ஸ், அரசு தேர்வுகளுக்கு எப்படி தயாராவது, சில நிறுவனங்களின் விளம்பரங்கள் என்று பல வீடியோக்களை சமீபத்தில் காண முடிகிறது.கிராமப்புறங்களில் இருப்பவர்கள், ‘நாங்களும் மீடியாவில் தெரிய மாட்டோமா’ என்கிற ஏக்கத்தை இதன் மூலம் தீர்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள். நகரத்தில் உள்ளோரும் இதே பதிலைக் கூறுகின்றனர்.

அப்படி தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான ஒரு சாதனமாகவும், பொழுது போக்கிற்காகவும் இதை பயன்படுத்தும் போது எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. பொதுவாக நம் பிரச்னை நமக்கு மட்டும்தான். மற்றவர்களுக்கு அது பொழுதுபோக்காகத்தான் தெரியும். சிலருக்கு டிக் டாக் கமெண்டுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரிவதில்லை. இதனால், தனி நபர் தாக்குதலை ஊக்குவிப்பது, எந்த ஒரு வேலையும் செய்யாமல் இதிலேயே மூழ்கி இருப்பது, முகம் தெரியாதவர்களின் பாராட்டுக்கு ஆசைப்பட்டு தங்கள் சுயத்தை இழப்பது… எனப் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன.

 

சிலர் இதற்கு அடிமையாகி உளவியலாகப் பாதிக்கப்படுகிறார்கள். வீட்டில் தனிமையில் இருக்கும் பலருக்கு ஆறுதலாக அமைந்தாலும், அதன் மூலம் ஏற்படும் விபரீதங்களை உணர்வதில்லை.

பணம் பறிப்பது முதல் பாலியல் சுரண்டலுக்கு பலியாவது வரை இவை இட்டுச் செல்கின்றன.    

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தின் போது கதறும் அந்த பெண்ணின் குரலை எடுத்துக்கூட சிலர் டிக் டாக் செய்தனர். இது எந்த மாதிரியான மனநிலை என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள், அரசின் செயல்பாடுகள் மீதான அவநம்பிக்கை என மக்கள் மத்தியில் எழும் மாற்றங்களை டிக் டாக் செயலி வலுவிழக்கச் செய்து வேறு பக்கம் அவர்களின் மனதைக் குவிக்கிறது. இதனால் டிக் டாக் செயலியை மறைமுகமாக அரசும் ஆதரிக்கிறது.

டெக்னாலஜி என்பது இருபுறகும் கூர்மையுள்ள கத்தி. அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நாம் உயிர் பிழைப்பது அடங்கியிருக்கிறது.

டிக் டாக் செயலி, இருபுறமும் கூர்மையுள்ள கத்தி!

(படங்களில் இருப்பவர்கள் மாடல்களே!)

 Tik Tok டேட்டா

* உலகம் முழுவதும் 700 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 200 மில்லியன் பேர் இந்தியர்கள்.

* டிக் டாக் பயனர்களில் 41% பேர் 16 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள்.

* d55.6% ஆண்கள், 44.4% பெண்கள் டிக் டாக் பயனர்களாக உள்ளனர்.

* d2018 ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் 2019க்குள் டிக் டாக் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது.

* உலக அளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட சமூக வலைத்தளங்களில், 60 மில்லியன் நிறுவல்களைக் கொண்டுள்ள டிக் டாக் முதலிடத்தில் உள்ளது.  இதில் இந்தியாவில் மட்டும் 44%.

* நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது பலரும் டிக் டாக்கில் செலவழிக்கின்றனர்.

* தற்சமயம் 155 நாடுகளிலும், 75 மொழிகளிலும் டிக் டாக் இயங்குகிறது.  

* d90% பயனர்கள் தினமும் டிக் டாக்கை பார்க்கின்றனர்; பயன்படுத்துகின்றனர்.

* ஒவ்வொரு நாளும் சராசரியாக உலகம் முழுக்க ஒரு மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன.

அன்னம் அரசு

Related Stories: