குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா: பல லட்சம் மக்களுக்கு இச்சட்டம் நம்பிக்கை அளிக்கும் என பேச்சு

டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளார். வட கிழக்கு மாநிலங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள மசோதா, குடியுரிமை திருத்த மசோதா ஆகும். நாடாளுமன்ற மக்களவையில், ஆளும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள நிலையில், இந்த மசோதா நேற்று முன்தினம் அங்கு தாக்கல் செய்யப்பட்டு எளிதாக நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் விழுந்தன.

இந்த மசோதாவை இன்று நண்பகல் 12 மணியளவில் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது விவாதத்திற்கு வாக்கெடுப்பு நடைபெறும்.  இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற  மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் மக்களவையை போன்று இந்த மசோதா மாநிலங்களவையில் எளிதாக நிறைவேறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையின் தற்போதைய பலம் 238 ஆகும். 238 பேரும் ஓட்டெடுப்பில் கலந்து கொள்கிறபோது 120 ஓட்டுகள் விழுந்தால்தான் மசோதா நிறைவேறும்.

இதில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு மொத்தம் 105 உறுப்பினர்கள் உள்ளனர். (பாரதீய ஜனதா-83, ஐக்கிய ஜனதாதளம்-6, சிரோமணி அகாலிதளம்-3, லோக்ஜனசக்தி-1, இந்திய குடியரசு கட்சி (அத்வாலே)-1, நியமன உறுப்பினர்கள்-11). 11 இடங்களை கொண்டுள்ள அ.தி.மு.க., 7 உறுப்பினர்களை கொண்டிருக்கிற பிஜூஜனதாதளம், தலா 2 இடங்களை பெற்றிருக்கிற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளுடன் ஆளும் பாரதீய ஜனதா கட்சி பேச்சு நடத்தி வருகிறது. இந்த கட்சிகள் ஏற்கனவே குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் ஆதரித்து ஓட்டு போட்டுள்ளன. எனவே மாநிலங்களவையிலும் ஆதரித்து ஓட்டு போடும் என பாரதீய ஜனதா கட்சி எதிர்பார்க்கிறது.

அமித் ஷா பேச்சு..

இந்த நிலையில், இந்த மசோதாவை மாநிலங்களவையில்  தாக்கல் செய்த அமித் ஷா தனது பேச்சில், பல லட்சம் மக்களுக்கு இந்த சட்டம் நம்பிக்கை அளிக்கும். நாடற்ற மக்களுக்கு இந்த சட்டம் நம்பிக்கை அளிக்கும். துன்பப்படும் மக்களுக்கு இந்த சட்டம் ஒரு வாய்ப்பு கொடுக்கும். துன்பப்படும் சிறுபான்மையினருக்கு இதனால் வெளிச்சம் கிடைக்கும். அவர்களுக்கான உரிமை கிடைக்க இதன் மூலம் வழி வகை செய்யப்படும். பாகிஸ்தான், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் எண்ணிக்கை 20% குறைந்துள்ளது. சிறுபான்மையினர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்திருக்கலாம்.

பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து சிலர் இந்தியா வந்து நிம்மதியாக இருக்கிறார்கள். நாங்கள் இந்த சட்டத்தை வாக்கு வங்கிக்காக செய்யவில்லை. நாங்கள் இந்த சட்டத்தை லோக்சபா தேர்தலுக்கு முன்பே கொண்டு வர முயற்சி செய்தோம். எங்களுக்கு வடகிழக்கு மக்களின் நன்மையே முக்கியம். இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று சிலர் வதந்தி பரப்புகிறார்கள். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் இதனால் பயப்பட கூடாது. பாகிஸ்தானில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது. ஆப்கானிஸ்தானில், வங்கதேசத்தில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது. இந்த சட்டம் அப்படி செயல்படாது, என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: