குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் எழுத வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் எழுத வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. ராஜ்யசபாவில் குடியுரிமை திருத்த மசோதாவை எப்படியும் நிறைவேற்றுவது என்கிற முனைப்புடன் மத்திய அரசு உள்ளது. குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் பாகிஸ்தானைப் போலவே பேசுகின்றன. இம்மசோதாவானது இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் எழுதப்பட வேண்டிய ஒன்று என பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து அமைதியை ஏற்படுத்தினோம். அதேபோல் அண்டை நாடுகளில் மத துன்புறுத்தல்களில் இருந்து தப்பி வந்த சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கத்தான் இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய இருக்கிறது. இது தொடர்பாக விவசாயிகள் முதல் ஏழைகள் வரை அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டறிந்து நிதி அமைச்சருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். இக்கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, குடியுரிமை மசோதாவை ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என பிரதமர் மோடி கூறினார் என்றார்.

Related Stories: