கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் நில உரிமையாளர்கள் விவசாயம்: உளுந்து, சோளம், நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளன!

சிவகங்கை: கீழடியில் அகழாய்வு பணி நடந்த நிலத்தில், அதன் உரிமையாளர்கள் விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளனர். கீழடியில் கடந்த ஜூன் 13ம் நாள் தொடங்கிய 5ம் கட்ட தொல்லியல் பணிகள் அக்டோபர் 3ம் தேதியுடன் நிறைவுபெற்றன. மொத்தம் 52 குழிகள் தோண்டப்பட்டு வட்டப்பானை, தண்ணீர் தொட்டி, கால்வாய், சுடுமண் குழாய் உள்ளிட்ட 900க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. பணி முடிந்த பின் குழிகள் மூடப்பட்டு நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அகழாய்வுக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டதை அடுத்து, நிலத்தின் உரிமையாளர்கள் முருகேசன், நீதியம்மாள், மாரியம்மாள் ஆகியோர் உளுந்து, சோளம் மற்றும் நிலக்கடலை உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். சமீபத்திய மழையால் இவை பசுமையாக காட்சியளிக்கின்றன.

அகழாய்வு பணிகள் முடிவுபெற்ற போதிலும், அந்த இடத்தை காண சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் ஜனவரி இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த பள்ளிசந்தைபுதூர் பகுதியில், கடந்த 2015ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. முதல்கட்ட ஆய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள் உள்ளிட்ட சுமார் 6,000 பொருட்கள் கிடைத்தன. இதையடுத்து 2016-17ம் ஆண்டுகளில் 2வது, 3வது கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதன்மூலம் வைகை ஆற்றின் கரையில் தமிழர்கள் நகரங்கள் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து 4 மற்றும் 5ம் கட்ட அகழாய்வுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: