சென்னையில் ஓடும் பேருந்தின் படியில் பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு

சென்னை: சென்னையில் மாநகர பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் ஒருவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகர் பேருந்து நிலைய வாசலில் 7ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் பேருந்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தான். வேளச்சேரியை சேர்ந்த குமார் என்பவரது மகன் சரண். இவர் தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை மாநகர பேருந்தில் தனது நண்பர்களுடன் தி.நகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். தி.நகர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து நுழையும் போது படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் அனைவரும் கீழே குதித்து கொண்டிருந்தனர். அப்போது மாணவன் சரண் என்பவரும் படியில் இருந்து கீழே குதிக்க முயற்சித்துள்ளார்.

Advertising
Advertising

அச்சமயம் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்த சரண், பேருந்தின் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பாண்டிபஸார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்போது பேருந்து நிலையத்தில் பதிவான சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக மாநகர பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து, பேருந்தில் பயணம் செய்தவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் படியில் தொங்கி பயணம் செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே இது மாணவர்களின் தவறா அல்லது ஓட்டுனரின் கவனக்குறைவா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: