வடகிழக்கை இனரீதியாக சுத்திகரிக்க மோடி-ஷா அரசு மேற்கொண்ட முயற்சி தான் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா!..ராகுல் காந்தி ட்வீட்

புதுடெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு மக்களுக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத ரீதியாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவால், வடகிழக்கில் வாழும் பழங்குடியின மக்கள் இடம் பெயர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமென்ற அச்சம் நிலவுகிறது.

இதனால், ஆரம்பத்தில் இருந்தே குடியுரிமை திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு இருந்தது. தற்போது மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வடகிழக்கில் போராட்டம் வெடித்துள்ளது. அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர் சங்கத்தினர் மற்றும் வடகிழக்கு மாணவர் பேரவை சார்பில் நேற்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் 4 மாநிலங்களிலும் மத்திய பாதுகாப்பு படையினரும் போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடந்தது.

தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி செல்ல முயன்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்ததால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. திப்ரூகரில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். சாலை, ரயில் மறியல் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல இடங்களில் பெண்களும் கூட்டம் கூட்டமாக சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். இதனால், அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் போராட்டக்களமாக காட்சியளிக்கின்றனர்.

இதனிடையே இம்மசோதாவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உச்சகட்டமாக, வடகிழக்கு மாநிலங்களில் மோடி-ஷா அரசு மேற்கொள்ளும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கம் தான் குடியுரிமை திருத்த மசோதா என விமர்சித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவுடன் இணைந்து வாழும் வடகிழக்கு மாநில மக்கள், அவர்களின் வாழ்க்கை முறை மீதான கிரிமினல் தாக்குதல் இது என சாடியுள்ளார். அத்துடன் வடகிழக்கு மாநில மக்களின் போராட்டங்களுக்கு தாம் துணை நிற்பதாகவும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Related Stories: