மெட்ரோ ரயில் தொடர்பாக சென்னை நிபுணர்கள் கோவையில் விரைவில் ஆய்வு

கோவை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிபுணர்கள் விரைவில் கோவையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர் என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறியுள்ளார். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என தமிழக அரசு அறிவித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் ஒன்று கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான சர்வே பணிகளை மேற்கொண்டது. இதில் எந்தந்த இடங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை தேவை?, எந்த வழித்தடத்தில் செயல்படுத்த வாய்ப்புகள் உள்ளன? என்பது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த ஆய்வு குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு அந்த தனியார் நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது. அதில் 4 வழித்தடங்களில் 136 கிலோ மீட்டர் தொலைவுக்கு கோவையில் மெட்ரோ ரயில் இயக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.  இதற்காக கோவை மாநகராட்சி சார்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிபுணர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிபுணர்கள் கோவைக்கு வர உள்ளனர். அப்போது கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறுகையில், ‘‘சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிபுணர்கள் கோவைக்கு அடுத்த வாரம் வர உள்ளனர். அவர்களிடம் மாநகர் பகுதிகளில் எந்தந்த வழிகளில் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்தலாம்? என்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும். பல்வேறு துறை அதிகாரிகளும் இந்த ஆலோசனையில் கலந்துகொள்வார்கள்’’ என்றார்.

Related Stories:

>