×

தரமற்ற கட்டுமானப் பணியால் உதிரும் பூச்சுகள்: புதிய கட்டிடத்திற்கு செல்ல மறுக்கும் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்

திருச்சுழி: திருச்சுழி அருகே கம்பாளி கிராமத்தில், அரசுப் பள்ளிக்கு கட்டப்பட்ட புதிய கட்டிடம் தரமில்லை என கூறி, மாணவர்கள் அங்கு செல்ல மறுக்கின்றனர். இதனால், ரூ.161 லட்சம் வீணானதாக புகார் தெரிவிக்கின்றனர். திருச்சுழி அருகே, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கம்பாளி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடவசதி இல்லாததால், மிகுந்த சிரமப்பட்டனர்.  இதனால், பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தில் கீழ், ரூ.160.81 லட்சத்தில் கண்மாய் கரை அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

ஆனால், கட்டிடம் கட்டிய ஒரு வருடத்திலேயே, கட்டிடத்தின் அஸ்திவாரம் மற்றும் சுவர்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும், சுவர்களில் பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்தும், செங்கற்கள் வெளியே  தெரிவதாகவும் மாணவர் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், கண்மாய் கரையை ஒட்டி கட்டிடம் இருப்பதால், கட்டிடத்தின் அஸ்திவாரம் மோசமாக உள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் புதிய கட்டிடத்திற்கு வருவதற்கு அச்சப்படுவதாக புகார் கூறுகின்றனர். மேலும், புதிய கட்டிடத்தில் பள்ளி செயல்பட்டால் மழை காலங்களில் பாதுகாப்பில்லை என பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். எனவே, இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : State high school students ,building ,Government School , Government School
× RELATED ஒடுகத்தூர் அருகே பரபரப்பு அரசு...