ராணிப்பேட்டை நகராட்சியில் சுகாதார சீர்கேட்டுடன் செயல்படும் அம்மா உணவகம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் சுகாதார சீர்கேட்டுடன் செயல்படும் அம்மா உணவகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை நகராட்சி வாரசந்தை மைதானம் அருகே ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அம்மா உணவகம் கட்டப்பட்டு கடந்த 24.5.2015 அன்று முன்னாள் முதல்வர் ெஜயலலிதாவால் திறக்கப்பட்டது. அப்போது, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், பிரிட்ஜ், ஸ்டீமர், குடிநீர் தொட்டிகள், இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் செய்ய தனித்தனி பாத்திரங்கள், பொதுமக்கள் நின்று சாப்பிட டேபிள், மின்விசிறி போன்ற அனைத்து வசதிகளுடன் திறக்கப்பட்டது.

இங்கு இரண்டு ஷிப்டுகளாக தலா ஒரு சூப்பர்வைசர், 6 பேர் பணியாளர்கள் என 12 பேர் வேலை செய்து வருகின்றனர். அங்கு காலை 1200 இட்லி, மதியம் தலா 310 சாம்பார் சாதம், தயிர் சாதமும் தயார் செய்து மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இந்த அம்மா உணவகம் சுகாதார சீர்கேட்டுடன் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், பிரிட்ஜ், ஸ்டீமர், குடிநீர் தொட்டிகள், இட்லி தயார் செய்யும் பாத்திரங்கள் என அனைத்தும் பழுதாகி, பயன்படுத்தப்பட முடியாமல் மூலையில் போடப்பட்டுள்ளன.

டேபிள்கள் சுத்தம் செய்யப்படாமல், வெளியில் கழிவு தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது. தொட்டிக்கு வரும் ஆற்றுக்குடிநீரை தான் உணவகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அதை தான் பொதுமக்களும் குடித்து வருகின்றனர். அந்த தொட்டியில் புழு பூச்சிகளுடன் சுத்தம் செய்யாமல் கிடக்கிறது. கைகழுவும் தொட்டியும் சரிவர சுத்தம் செய்வதில்லை. ஒட்டு மொத்த சுகாதார சீர்கேட்டுடன் செயல்படும் இந்த அம்மா உணவகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் கூறும்போது, இதுகுறித்து  நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளோம் என அலட்சியமாக பதில் அளித்தனர்.

Related Stories: