‘இயற்கை கொலையை’ இனியாவது தடுப்போம்: இன்று (டிச.11) சர்வதேச மலைகள் தினம்

இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடையாக இரண்டை குறிப்பிடலாம். ஒன்று மலை. மற்றொன்று மரம். கூடுதலாக சேர்த்துக் கொள்ள விரும்பினால், இந்த 2 கூட்டணியில் உருவாகும் மழை. நகர் விரிவாக்கம், நவீனமயமாக்கல் என்ற பெயரில் நாம் மரங்களை அழித்து வருகிறோம். அடர்ந்த சோலைவனம் போல காட்சியளிக்கும் மலைப்பகுதிகளில் உள்ள விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. மறுபுறம் கிரானைட் கற்களுக்காக மலைகள் கேக் போல வெட்டி அழிக்கப்படுகின்றன. இப்படி மலைகள், மரங்கள் அழிப்பால் மழைவளத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

ஏன் மலைகளை காக்க வேண்டும்?

மலைகள் என்றால் வனவிலங்குகள் வசிக்கும் பகுதியாகத்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நிலைமையோ வேறு? உலக மக்கள் தொகையில் 13 சதவீதம் பேர், இன்னும் மலைகளில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 40 சதவீதம் பேர் உணவுத்தேவைக்கு மலைகளையே நம்பி உள்ளனர். உலக தண்ணீர் தேவையை 75 சதவீதம் மலைப்பகுதிகளே பூர்த்தி செய்கின்றன. இப்போது புரிகிறதா? மலை நல்லது என்று?

அது மட்டுமா?

மலைகளில் விளையும் அற்புத மூலிகைகள், வன உயிரினங்கள் தான் நம் உணவுச்சங்கிலியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அடர்ந்த மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியே தங்களுக்கு பாதுகாப்பு என விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. விலங்குகளுக்கு பயந்து மனிதன் வனத்திற்குள் செல்ல அஞ்சுகிறான். இந்த 2 சம்பவங்களே மலைகளையும், மரங்களையும் பாதுகாக்கின்றன. ஆனால், வளம் கொழிக்கும் மரங்கள், மலைகளினால், பணம் கொழிக்கும் என எண்ணி பலர் மலைகளை, மரங்களை அறுத்து ‘இயற்கை கொலை’ செய்கின்றனர். இனியாவது, நம் வருங்கால சந்ததியினரின் எதிர்கால வாழ்வை கருதி, இயற்கை கொலையை இனியாவது தடுத்து நிறுத்துவோம். நம் நாட்டின் மிக முக்கிய மலைத்தொடர்களான கிழக்கு, மேற்கு தொடர்ச்சி மலைகள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையை பொறுத்தவரை தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் பெரும்பாலான மரங்கள் மொட்டை அடிக்கப்பட்டு விட்டன.

இதனால் மலைப்பகுதியான வெப்பக்கானலாக மாறிப்போனது. வளமை கொஞ்சும் தேனி மாவட்டம், கடந்த சில ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் சிக்கி தவிப்பதற்கு, மேகமலை பகுதியில் மரங்களை வெட்டி அழித்ததே முக்கிய காரணம்.

கடல் மட்டத்தில் இருந்து, 1,600 மீட்டர் உயரம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள், குஜராத்தில் துவங்கி கன்னியாகுமரி வரை பயணிக்கிறது. ஒடிசாவில் தொடங்கும், கிழக்கு தொடர்ச்சி மலைகள் நீலகிரியின் மேற்கு பகுதி வரை நீடிக்கிறது. இம்மலைப்பகுதிகளில் பெரும்பாலானவை நாகரீக வளர்ச்சிக்காகவும், தொழில் தேவைகளுக்காகவும் அழிக்கப்பட்டு வருகின்றன. கனிம வளங்கள் அழிவால், கடந்த 50 ஆண்டுகளில் அப்பகுதி நீராதாரங்கள் பெருமளவு அழிக்கப்பட்டு விட்டன. இந்த மலைத்தொடர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த யுனெஸ்கோ, இதை, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இம்மலைப்பகுதியை பாதுகாக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், மலைவனங்களை அழித்து, மழை வளத்தையும் சேர்த்து சமூக விரோதிகள் அழித்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில், 600க்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் அழிந்துள்ளன. இதனால் கடல் மட்டம் உயர்ந்து, பல இடங்கள் மாயமாகும் சூழல் உருவாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டுதான், கடந்த 2003ல் இருந்து, யுனெஸ்கோவால் டிச.11ம் தேதி ‘சர்வதேச மலைகள் தினம்’ என கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, மலைகளை காப்போம்... மழைதனை பெறுவோம்.

Related Stories:

>