சேதுபாவாசத்திரம் பகுதியில் ஏரி தண்ணீரில் மிதக்கும் தென்னை மர கழிவுகள்

சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் பகுதியில் கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்கள் ஏரிகளில் மிதக்கிறது. எனவே இதை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதுபாவாசத்திரம் பகுதியில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி அதிகாலை கரை கடந்த கஜா புயல் கோரதாண்டவமாடியது. இதனால் இந்த பகுதியில் கூரை மற்றும் ஓட்டு வீடுகள், மா, பலா, தேக்கு என காட்டு மரங்கள், தொழிற்சாலைகள், படகுகள் சேதமடைந்தது.

மேலும் சேதுபாவாசத்திரம் பகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்த ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தது. இந்த சாய்ந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்த முடியாமல் 6 மாதங்கள் வரை தென்னை விவசாயிகள் கஷ்டத்திற்கு ஆளாகினர். கோடை காலங்களில் தண்ணீரின்றி பட்டுப்போன தென்னை மரங்களை வெட்டி துண்டு வைத்து திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளுக்கு லாரிகளில் ஏற்றி சென்ற வியாபாரிகள் கஜா புயலுக்கு பின் இந்த பகுதியை திரும்பிக்கூட பார்க்கவில்லை. வசதி படைத்தவர்கள் தங்கள் சொந்த செலவிலேயே மரங்களை வெட்டி வெளியூர் வியாபாரிகளுக்கு இலவசமாக வழங்கி அப்புறப்படுத்தினர். வசதியற்ற விவசாயிகள் பல்வேறு இடங்களில் மரங்களை வெட்டி சாலையோரங்கள், வறண்டு கிடந்த ஏரிகளில் அப்புறப்படுத்தினர். கோடைகாலம் என்பதால் அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதன் பாதிப்பு தற்போது தான் தெரிய வருகிறது.

தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகள் நிரம்பி தூக்கி வீசப்பட்ட தென்னை மர துண்டுகள மிதக்க துவங்கியுள்ளது. அதுமட்டுமின்றி மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழுகி வருவதால் தண்ணீரும் கலர்மாறி துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது. இதனால் இதில் குளிப்பதற்கு கூட மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இந்த தண்ணீரை ஆடு, மாடுகள் குடித்தால் தொற்றுநோய் பரவுமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் நிலவுகிறது. எனவே ஏரி, குளங்களில் மிதக்கும் தென்னை மரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: