சூலூர் அருகே துணிகரம்: திருமண வீட்டில் 20 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் மொய்ப்பணம் கொள்ளை

சூலூர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முருகேசன் தொழிலதிபர். இவர் சூலூர் அருகே பாப்பம்பட்டி அயோத்தியாபுரம் அனுமந்த நகரில்  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் பாண்டியனுக்கு கடந்த மாதம் 11ம் தேதி சிவகாசியில் திருமணமும் அதைத்தொடர்ந்து 17ம் தேதி கோவையில் திருமண வரவேற்பும் நடந்தது.

திருமணத்தில் 20 பவுன் நகை, வெள்ளி, பித்தளை பரிசு பொருட்களை நண்பர்கள், உறவினர்கள் வழங்கியிருந்தனர். மேலும் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மொய்ப்பணமும் வசூலானதாக தெரிகிறது. இவை அனைத்தையும் வீட்டின் பீரோவில் வைத்திருந்தனர். திருமண வரவேற்பு முடிந்ததும் 18ம் தேதி முருகேசன் மற்றும் புதுமண தம்பதி உள்ளிட்ட அனைவரும் சொந்த ஊரான சிவகாசிக்கு சென்றுவிட்டனர்.

நேற்று காலை சிவகாசியில் இருந்து முருகேசன் வீடு திரும்பினார். அப்போது  வீட்டின் கதவு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ மற்றும் லாக்கரும் உடைக்கப்பட்டு கிடந்தன.
அதில் இருந்த 20 நகை பவுன் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு, பித்தளை சாமான்கள், திருமண பரிசுப் பொருட்கள், மொய்ப்பணம் ரூ. 1 லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து முருகேசன் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.தொடர்ந்து இந்த கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sulur ,wedding house , Robbery
× RELATED பெட்ரோல் பங்க்கில் துணிகர கொள்ளை