மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினாவில் உள்ள தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரிய வழக்கில், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சர்வதே மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்காக, மெரினா கடற்கரையில் மரப்பலகையிலான தற்காலிக சாய்தளம் அமைக்கப்பட்டு வந்தது.  பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், தங்களது சக்கர நாற்காலியில் சாய்தள பாதை வழியாக கடல் அலைகள் வரும் இடம் வரை சென்று மகிழ்ந்தனர்.  பல்வேறு நிகழ்ச்சிகளும் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியை மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையையும் தந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும்  அந்த சாய்தளம் இரண்டு நாட்களில் அகற்றப்பட்டுவிடும்.

 இந்நிலையில் இந்த சாய்தள பாதையை அகற்றாமல் நிரந்தர பாதையாக மாற்றக்கோரி சென்னை வேளச்சேரியை சேர்ந்த வக்கீல் கே.கேசவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு  தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: