×

ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்

பூந்தமல்லி: போரூரில் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவரை போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.  மவுண்ட் - பூந்தமல்லி சாலை, போரூர் அருகே உள்ள ஏடிஎம் மையத்திற்குள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த மர்ம நபர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சி வங்கியின் தலைமையகத்துக்கு தெரியவர, இதுபற்றி போரூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  போலீசார் உடனே, சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். ஏடிஎம் மையத்தில் பார்வையிட்டபோது, இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால், லாக்கரை உடைக்க முடியாததால், பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையனை பார்த்தபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம், சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் போதையில் பைக் ஓட்டி வந்து போரூர் பகுதியில் மற்றொரு பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். அவரை பிடித்த போலீசார், வாகனத்தின் ஆவணங்களை எடுத்து வருமாறு, முகவரியை வாங்கி வைத்து கொண்டு அனுப்பிய வைத்துள்ளனர். அந்த நபர் தான் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.   விசாரணையில், அவர் அம்பத்தூர், கள்ளிக்குப்பம், புதூர் பகுதியைச் சேர்ந்த யோகேல் ராஜா (24), என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.  அதில், விபத்து ஏற்படுத்திய பின்னர், வாகனத்தின் ஆவணத்தை எடுத்துவருமாறு போலீசார் கூறியதால், போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றேன். அப்போது, கையில் செலவுக்கு பணமும் இல்லை, போலீசாரும் பைக்கை பிடுங்கி வைத்து கொண்டதால் ஆத்திரமடைந்து போரூரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டேன், என தெரிவித்துள்ளார். இதையடுத்து யோகேல்ராஜாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Tags : Plaintiff , ATM, robbery, youth arrested
× RELATED ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றவரை தாக்கிய 2 பேர் கைது