கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிதாக அமைத்த பெயர்பலகை 2 மாதத்தில் மாயம்: மக்களின் வரிப்பணம் வீணடிப்பு

பெரம்பூர்: வடசென்னை பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து  வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து அதன் மூலம் வரக்கூடிய நீரை  தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க அரசு திட்டமிட்டது. இதற்காக கொடுங்கையூர்,  வழுதலைமேடு பிரதான சாலையில், 8  ஏக்கர் பரப்பளவில், 3ம் நிலை கழிவுநீர்  எதிர் சவ்வூடு பரவல் முறை மூலம் சுத்திகரிப்பு நிலையம், 348 கோடி  மதிப்பீட்டில் அமைக்க, கடந்த 2016ம் திட்டமிடப்பட்டு பணிகள்  நடைபெற்று  வந்தன. அதன்படி திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர் பகுதிகளில் உள்ள 96 கழிவு நீரேற்று நிலையங்களில் இருந்து குழாய் மூலம் 220 மில்லியன் லிட்டர் கழிவுநீர் கொடுங்கையூர் வழியாக வழுதலம்மேடு பிரதான சாலையில் உள்ள 3ம் கட்ட சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்றது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படும்.

பின்னர், மணலி, எண்ணூர், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள 11 மத்திய, மாநில அரசு தொழிற்சாலைகளுக்கு 1000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், 80 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அனுப்ப திட்டமிடப்பட்டது. இதற்கான பணி நிறைவடைந்ததையொட்டி கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி வைத்தனர். இந்த நிலையத்தின் நுழைவாயிலில் இருபுறம் உள்ள சுவர்களில் பெயர் பலகைகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த பெயர் பலகையில் இருந்த எழுத்துக்கள் அனைத்தும் உடைத்து அகற்றப்பட்டுள்ளன. இதுற்றி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அந்த இடத்தில் கிரானைட் கற்களை பதித்து மீண்டும் புதிதாக பெயர் பலகை  வைக்க உள்ளதாக தெரிவித்தனர்.   ஏற்கனவே பிரமாண்டமாக அமைக்கப்பட்ட பெயர் பலகைகளை அகற்றி விட்டு தற்போது புதிதாக அதிக செலவு செய்து கிரானைட் கற்களை பதித்து பெயர் பலகை வைக்க வேண்டிய அவசியம் என்ன என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறு புதிய பெயர் பலகை வைப்பதினால் மக்கள் வரிப்பணம் மேலும் வீணக்கப்படும் அவலம் உள்ளது.

இதுகுறித்து குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய   ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘‘கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய  ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில்  அதை திறப்பதற்காக முதல்வர்   வந்ததால், அவசர கதியில்  அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. தற்போது  சுவரில் அமைக்கப்பட்ட பெயர் பலகையின் எழுத்துக்களை அகற்றி, அந்த இடத்தில்  கிரானைட் கற்கள் பதிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் முடிந்தவுடன் மீண்டும்  பெயர் பலகை வைக்கப்படும்,’’ என்றார். அப்பகுதி மக்கள் கூறுகையில் ‘‘மக்களின்  வரிப்பணத்தை அரசு உரிய முறையில் செலவழிக்க வேண்டும். தேவையில்லாத காரணத்திற்காக வரிப்பணம் வீணடிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்கனவே உள்ள பலகையை அகற்றிவிட்டு, அங்கு கிரானைட் கற்கள் பதித்து, பின்னர் புதிய பெயர் பலகை வைப்பதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும் நிலை உள்ளது,’’ என்றனர்.

Related Stories:

>