×

திண்டுக்கல்லில் செயல்வீரர்கள் கூட்டம் கே.எஸ்.அழகிரி முன் காங்கிரசார் கோஷ்டி மோதல்: பதவி பறிக்கப்படும் என எச்சரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன் கோஷ்டி மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திண்டுக்கல்லில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ தாக்கல் செய்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை நடைமுறைப்படுத்தினால், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமே ஆட்டம் காணும். பாஜ செய்த கெடுதல்களிலேயே மிகப்பெரிய கெடுதல், இதுதான்.  இந்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவளித்து வாக்களித்தது வருந்தத்தக்கது. தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் 5 லட்சம் பேர் உள்ளனர். இந்த மசோதாவால் அவர்களது நிலை ஆபத்தில் உள்ளது. பொருளாதார வீழ்ச்சி காரணமாக மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு வழங்கவில்லை. இதனை கேட்காமல் கைகட்டி கூனிக்குறுகி தமிழக அரசு உள்ளது. சுயமரியாதை இல்லாத கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது என்றார்.

கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனி ராஜா பேசும்போது, சித்தரேவு பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணி பெயரை சொல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், மேடையிலிருந்த அப்துல்கனி ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்துல் கனி ராஜாவின் ஆதரவாளர்களுக்கும், பாலசுப்பிரமணி ஆதரவாளர்களுக்கும் இடையே மேடையில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையிலேயே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கே.எஸ்.அழகிரி பேசுகையில், ‘‘தேவையில்லாமல் பிரச்னையை எழுப்பி தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டவர்களின் மாவட்ட பதவிகள் பறிக்கப்படும்’’ என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Activists ,Dindigul ,KS Alagiri In Dindigul ,clash ,Congress ,meeting , In Dindigul, activists' meeting, Congress, factional clash
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...