மயிலாடுதுறையில் நள்ளிரவு துணிகரம் மளிகை கடையை உடைத்து வெங்காயம் கொள்ளை

மயிலாடுதுறை: வெங்காயம் விலை உச்சத்தை எட்டிய நிலையில், மளிகை கடையை உடைத்து குடோனில் இருந்த வெங்காயத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவை சேர்ந்தவர் சேகர் (45). இவர், அப்பகுதியில் கடந்த 10 வருடமாக காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் பின்புறம் குடோன் உள்ளது. அதில் பெரிய வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மூட்ைடகளில் வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கடை மற்றும் குடோனை பூட்டி விட்டு சென்ற சேகர், நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கு கல்லாவில் இருந்த 12ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருந்தது. கடையின் பின்புறம் இருந்த குடோனுக்கு சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த மூட்டைகளில் 60கிலோ பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சை மிளகாய், கேரட், பீட்ரூட், இஞ்சி உள்பட 60 கிலோ காய்கறிகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. வெங்காயம் விலை உச்சத்தை எட்டிய நிலையில், நள்ளிரவு மளிகை கடையை உடைத்து குடோனில் இருந்த வெங்காயத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: