சேலம் அருகே துணிகரம் தனியார் சொகுசு பஸ்சில் 1 கோடி கொள்ளை: கழிவறைக்கு சென்ற வாலிபரிடம் மர்மநபர்கள் கைவரிசை

சேலம்: சேலம் அருகே தனியார் சொகுசு பஸ்சில், கோவை எல்ஐசி ஏஜென்டிடம் ₹1 கோடி பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை திருநகர் 2வது வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(59). இவர் ஆர்டரின் பேரில் தங்க நகை செய்து விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் ஹரிஷ்(32), எல்ஐசி ஏஜென்ட். இவர், கடந்த 8ம் தேதி, 2.6 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை எடுத்துக் கொண்டு, ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் விற்க பஸ்சில் புறப்பட்டுச் சென்றார். அங்கு ₹1 கோடிக்கு நகையை விற்று விட்டு, பணத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு, சேலம் வழியே கோவை செல்ல தனியார் சொகுசு பஸ்சில் புறப்பட்டார். அந்த பஸ், நேற்று காலை 7 மணிக்கு சங்ககிரி அருகே வைகுந்தம் சுங்கச்சாவடிக்கு வந்தது. அப்போது, பயணிகள் காலைக்கடனை கழிக்க வசதியாக கழிவறை அருகே பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

ஹரிஷ் பஸ்சில் இருந்து இறங்கி கழிவறைக்கு சென்றுள்ளார். பின்னர், 10 நிமிடத்தில் மீண்டும் பஸ்சுக்கு வந்து பார்த்தபோது, 1 கோடி பணம் வைத்திருந்த பையை காணவில்லை. மர்மநபர்கள், அந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. உடனடியாக இதுபற்றி சங்ககிரி போலீசில் புகார் கொடுத்தார். ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 1 கோடி கொள்ளை என்பதால், ேசலம் மாவட்ட எஸ்பி தீபா கனிகர், ஹரிஷிடம் நேரடி விசாரணை நடத்தினார். கழிவறை பகுதியில் பஸ் நின்றபோது, அங்கு வந்த மர்மநபர்கள் யார்? பஸ்சில் இருந்து யாராவது குறிப்பிட்ட பையுடன் இறங்கிச் சென்றனரா? என அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: