பணியில் இருந்து நீக்கியதால் கோபம் ‘108’க்கு வெடிகுண்டு மிரட்டல்: முன்னாள் டிரைவர் கைது

சென்னை: பணியில் இருந்து நீக்கிய விரக்தியில் 108 கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் டிரைவரை போலீசார் கைது செய்தனர். சென்னை தேனாம்பேட்டையில் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இங்கு, கடந்த வாரம் ஒரு  அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘108 கட்டுப்பாட்டு அறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வெடிக்கும்’ என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். உடனே, ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து அறையை விட்டு வெளியேறினர். பின்னர், தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என தெரிந்தது.

தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, நாகையை ேசர்ந்த வில்லியம்ஸ் (35) என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவர், ஏற்கனவே 108 ஆம்புலன்சில் பணியாற்றிய போது சரியாக வேலை செய்யாததால் உயரதிகாரிகளால் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால், ஆத்திரத்தில், மது போதையில் 108 கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிந்தது. இதைதொடர்ந்து வில்லியம்சை போலீசார் நாகையில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: