×

குடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை விதிக்க பரிந்துரை: அமெரிக்க மத ஆணையம் எச்சரிக்கை

வாஷிங்டன்: இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தடை விதிக்கும்படி அமெரிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என இந்த நாட்டை சேர்ந்த, ‘சர்வதேச மத சுதந்திர ஆணையம்’ எச்சரித்துள்ளது.  திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் இந்த சட்ட திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் ‘சர்வதேச மத சுதந்திர ஆணையம்’ மத்திய அரசுக்கே எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறபட்டுள்ளதாவது: திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா தவறான திசையில் எடுக்கப்பட்ட பயங்கரமான திருப்பமாகும்.

இது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் இந்திய அரசியல் சாசனத்திற்கும், மதச்சார்பற்ற இந்தியாவின் புகழ் பெற்ற வரலாற்றுக்கும் எதிரானது.  இந்த மசோதா மதப்பாகுபாட்டை உருவாக்கக் கூடியது. தனது நாட்டு குடிமகன்களுக்கு இந்திய அரசு மதச் சோதனையை நடத்துகிறது. குடியுரிமை மசோதாவால் பல முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிற தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மீது தடை விதிப்பு நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அமித்ஷாவின் பெயரை நேரடியாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இந்த ஆணையம், ‘பிற தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்’ என்ற வாசகத்தின் மூலம் மோடியின் பெயரை மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு விசா வழங்க கூடாது என்றதும் இதுதான்
கடந்த 1998ல் உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம், வெளிநாடுகளில் நடக்கும் மத சுதந்திர விதிமீறல்களை ஆய்வு செய்து, அதற்கான பரிந்துரைகளை அமெரிக்க அதிபர், வெளியுறவுத் துறை மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வழங்கும். கடந்த 2002ல் கோத்ரா வன்முறையை தொடர்ந்து, அப்போதைய குஜராத் முதல்வரான நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட வேண்டும் என 2005ல் பரிந்துரைத்தது இந்த ஆணையம்தான்.

மத்திய அரசு பதிலடி
அமெரிக்க மத சுதந்திர ஆணையத்தின் மிரட்டலுக்கு, மத்திய அரசு உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையத்தின் நிலைப்பாடு குறித்து எந்த ஆச்சர்யமும் இல்லை. ஏனெனில், இதற்கு முன்பும் பலமுறை அவர்கள் இதேபோல் ஒருதலைப்பட்சமாக, ஒருபக்க கருத்தை மட்டுமே கேட்டு முடிவு எடுத்துள்ளனர். மசோதா குறித்து முழுமையாக புரிதல் அவர்களுக்கு இல்லை. குடியுரிமை மசோதாவால் இந்தியாவில் இருந்து சிறுபான்மையினர் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள்.

மற்ற நாடுகளில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அடைக்கலம் கொடுக்கும் மசோதா இது. உண்மையிலேயே மத சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருப்பவர்கள் இதை வரவேற்க வேண்டுமே தவிர, விமர்சிக்கக் கூடாது. மேலும் இந்த விஷயத்தில் அமெரிக்க ஆணையம் தலையிட உரிமையில்லை,’ என கூறப்பட்டுள்ளது.



Tags : Modi ,Citizenship Bill: US Religious Commission warns Banning Amit Shah ,US Religious Commission , Citizenship Bill, Modi, Amit Shah, American Religious Commission
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...