திமுக உள்பட கட்சிகள் தொடர்ந்த வழக்கு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? : உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு

புதுடெல்லி: ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையில் இடஒதுக்கீட்டை மேற்கொள்ளாத மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திமுக உட்பட 5 கட்சிகள் மற்றும் வாக்காளர் தரப்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்கையும் உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016ல் முடிந்தது. அதற்குப் பிறகு பல்வேறு காரணங்களை கூறி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் இழுத்தடித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தது. இதையடுத்து முதலாவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்த தேர்தல் ஆணையம், இரண்டாவதாக புதிய அறிவிப்பாணையை கடந்த 7ம் தேதி வெளியிட்டது. அதில் தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 27 மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடத்துவதாகவும், அதில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகியவை புதிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், நேற்று முன்தினம் முதல் வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஒன்பது புதிய மாவட்டங்கள் நீங்கலாக மற்றவைகளுக்கு தேர்தல் நடத்தப்படுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் முறையாக இடஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்பதால், அதனை ரத்து செய்து விட்டு தேர்தல் சட்ட விதிகளின்படி அனைத்து பணிகளையும் முடித்த பின்னர் புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என திமுக தரப்பில் புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் என மொத்தம் 5 கட்சிகளும், அதேபோல் 6 மாவட்ட வாக்காளர் தரப்பிலும் தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்த நீதிமன்றம், டிசம்பர் 11ம் தேதி விசாரிப்பதாக உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் கரூரைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வார்டுகள் மறுவரையறை செய்யக்கோரியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பரிசீலனை செய்த நீதிமன்றம், மனுவை திமுக மனுவுடன் இணைத்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. இன்றைய விசாரணையின் முடிவில் வெளியிடப்படும் உத்தரவை பொருத்துதான் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா அல்லது இடைக்கால தடை விதிக்கப்படுமா என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு பதில் மனு

தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘கடந்த 2011ம் ஆண்டு வரையறை செய்த அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடஒதுக்கீடு  அடிப்படையில் தான் தேர்தல் நடத்தப்படுகிறது. அதனால் இது தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று அதில் கூறியுள்ளது.

Related Stories:

>