நடிகர் விஜய் மீதான வழக்கு ரத்து முகாந்திரம் இருந்தால் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: கதை திருட்டு வழக்கில் ‘கத்தி’ படத்தையும், ‘தாகபூமி’ குறும்படத்தையும் மாஜிஸ்திரேட் பார்த்து, குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்தால் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் விசாரிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர், தஞ்சை விவசாயிகளின் சிரமத்தையும், தற்கொலை செய்து கொண்டதையும் கருவாக வைத்து ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை எடுத்துள்ளார். இந்த கதையை திரைப்படமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், தனது தாகபூமி கதையை திருடி ‘கத்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக ராஜசேகர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், கத்தி திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரித்த லைக்கா நிறுவனத்தினர், நடிகர் விஜய் மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோர் தரப்பில் தனக்கு இழப்பீடு வழங்கக்கோரி, தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2014ல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. தனது கதையை திருடி படம் எடுத்ததால், காப்பிரைட் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை ஜேஎம் 1 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராஜசேகர் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் ஆஜராகக்கோரி கத்தி படக்குழுவினருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் மற்றும் கத்தி படக்குழுவினர் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘இந்த வழக்கில் நடிகர் விஜய் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆகியோருக்கு எந்த தொடர்பும் இல்லை. கதை தொடர்பான குற்றச்சாட்டில் தயாரிப்பு நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லை. எனவே, படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தவிர்த்து மற்றவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. குறிப்பிட்ட இந்த வழக்கு மீண்டும் தஞ்சை ஜேஎம் 1 நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பப்படுகிறது. கத்தி திரைப்படம் மற்றும் தாகபூமி குறும்படம் இரண்டையும் மாஜிஸ்திரேட் பார்க்க வேண்டும். புகார்தாரரின் குற்றச்சாட்டிற்கு போதுமான முகாந்திரம் இருப்பதாக தெரியவந்தால், காப்பிரைட் சட்டப்படி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: