×

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டின் குடியுரிமை கோரி குவியும் விண்ணப்பம் : இதுவரை 12 லட்சம் பேர் பதிவு

புதுடெல்லி: ‘கைலாசா’ நாட்டின் குடியுரிமையை கேட்டு ஏராளமான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் குவிவதாகவும், 12 லட்சம் பேர் இதுவரை பதிவு செய்துள்ளதாகவும் சாமியார் நித்தியானந்ததா தெரிவித்துள்ளார். சாமியார் நித்தியானந்தா மீது பலாத்கார வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர் தனது மகள்களை நித்தியானந்தா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்துக்கு கடத்தி சென்று சிறை வைத்துள்ளதாக போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நித்தியானந்தா மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து பல்வேறு வழக்குகள் அவர் மீது பாய்ந்ததால் அவர் ஈக்வடார் நாட்டுக்கு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ஒரு தீவை விலைக்கு வாங்கி அதை `கைலாசா’ என்ற தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் நித்தியானந்தா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிய முடியாமல் போலீசார் திணறும் நிலையில், அவர் தினமும் சமூக வலைதளங்களில் புதுப்புது வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இது தொடர்பான மீம்ஸ்களும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நித்தியானந்தா தனது முகநூல் பக்கத்தில் சத்சங்கம் மூலம் தனது சீடர்களிடம் நேரலையில் பேசினார். அவர் கூறியதாவது:

கைலாசா தனி நாட்டை வரவேற்று லட்சக்கணக்கில் இ-மெயில்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதுவரை இந்த நாட்டில் குடியுரிமை கோரி 12 லட்சம் பேர் தங்களை இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனர். தினமும் 1 லட்சம் பேர் இந்த இணையதளத்தில் உறுப்பினர் ஆகி வருகின்றனர். கைலாசா தனிநாடு தொடங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகளை விரைவில் அறிவிப்பேன். தனி நாடு அமைக்கவும், சீடர்களுடன் வாழவும் சில நாடுகள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளன. குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்கள் எனக்கு சிறிது காலம் அவகாசம் தரவேண்டும். தனி நாடு அமைக்க உலக நாடுகளை சேர்ந்த பலர் எனக்கு நிலம் தரவும் முன்வந்துள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில நாடுகள் என்னை அதிகாரப்பூர்வமாக அணுகி, கைலாசா நாடு அமைக்க அழைப்பு விடுத்துள்ளன. அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம். விரைவில் தனி நாட்டுக்கு இடம் அமையும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளளார்.

கைலாசா நாடாய்யா... அது, எங்கய்யா இருக்கு?

சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில், ‘நான் வாங்கியுள்ளதாக கூறப்படும் கைலாசா நாடு எங்கு உள்ளது என தெரிவித்தால் அங்கு போய் செட்டிலாகி விடுவேன். கைலாசா நாடு தொடர்பான மீம்ஸ்கள், மீம்ஸ் உருவாக்குபவர்களால் பிரபலமாகி விட்டது. மீம்ஸ் கிரியேட்டர்கள் தாங்கள் வாங்கிய காசுக்கு கூவுகிறார்கள்,’ என்று கூறியுள்ளார்.

சம்பளம் தராமல் மோசடி நாமக்கல் நபர் புதிய புகார்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த செங்கோட்டுவேல் என்பவர் நித்தியானந்தா மீது மோசடி புகார் தெரிவித்துள்ளார். செங்கோட்டுவேல் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஜனனி இன்போ டெக் என்ற சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். எனது உறவினர் தனசேகர் மூலம் நித்தியானந்தாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடைய சொற்பொழிவு வீடியோக்கள் மற்றும் அவரது கருத்துகள் கூகுள் இணையதளத்தில் முதலிடத்தில் டிரெண்டிங் ஆக செய்ய வேண்டும் என எனக்கு உத்தரவிட்டார். அதை ஏற்று அவரது வீடியோக்களை டிரெண்டிங் ஆக்கினேன். ஆனால், அவர் அதற்கான சம்பளத்தை இதுவரை தரவில்லை. இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரமத்திற்கு சென்று கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக அப்பகுதி காவல் நிலையம் முதல் கர்நாடக முதல்வர் வரை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Nithyananda , Nithyananda's Kailasa Citizenship Application, 12 lakh people, registered so far
× RELATED நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து 2...