கேலிக்கூத்தாகும் ஜனநாயக தேர்தல் ஊராட்சி பதவிகளுக்கு பல லட்சம் ஏலம்: தலைவர், 25 லட்சம்; வார்டு உறுப்பினர், 2 லட்சம்: திருச்சி, தர்மபுரி, ராமநாதபுரம், பெரம்பலூரில் பரபரப்பு

சென்னை: தமிழகத்தில் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் ஊராட்சி பதவிகள் பல லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. திருச்சி, பெரம்பலூர், தர்மபுரி, ராமநாதபுரத்தில் வார்டு உறுப்பினர் பதவி ரூ.2 லட்சம் வரையிலும், தலைவர் பதவி ரூ.25 லட்சம் வரையிலும் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் வரும் 27, 30 தேதிகளில் இரு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுமுன்தினம் துவங்கியது. திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா அரசலூர் கிராமத்தில் 9 வார்டுகள் உள்ளது. இதில் 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட இதுவரை யாரும் மனு வாங்கவில்லை. இந்நிலையில் அங்குள்ள மாரியம்மன் கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு ஊர் முக்கிய பிரமுகர்களின் கூட்டம் நடந்தது.

இதில், 4வது வார்டில் போட்டியின்றி உறுப்பினரை தேர்ந்தெடுக்கலாம். அதிக தொகை கொடுப்பவர்களுக்கு வார்டு உறுப்பினர் பதவி என்று அறிவிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்படுவர் கோயிலுக்கு நன்கொடை தரவேண்டும் என்று பேசப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த ஒருவர், ரூ.2லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டார். தர்மபுரி மாவட்டம் பனைகுளம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் உள்ள பனைகுளம் ஊராட்சி தலைவர் பதவி 25.4 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2011 முதல், இந்த பதவி ஏலத்திற்கு எடுக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது வேட்பு மனுதாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கிய நிலையில், ஊராட்சி தலைவர் பதவி 25.4 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. திருமல்வாடி கிராமத்தில் வரக்கூடிய பனைகுளம் ஊராட்சி மன்ற 3 வார்டுகளும் தலா ₹50 ஆயிரத்திற்கும், பனைகுளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய வார்டு எண்-2 ஆகிய பதவிகளும் ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் பரவுகிறது.

இதே பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தும் இம்மானுவேல் என்பவர், தற்போது ஏலம் எடுத்துள்ளார். எந்த கட்சியையும் சாராத அவர், பல நன்மைகளை செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து 2016ல் முருகன் என்பவர் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, 35 லட்சத்திற்கு ஏலம் எடுத்து ஊர்பெரியவர்களிடம் பணத்தை செலுத்தியுள்ளார். தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பணத்தை அவரிடமே திரும்ப வழங்கியுள்ளனர். தற்போது, ஊராட்சி தலைவர் பதவி, நேற்று முன்தினம் இரவு ஊர்பிரமுகர்கள் முன்னிலையில் இம்மானுவேலுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் 25.4 லட்சம் செலுத்தி இம்மானுவேல், ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் எடுத்ததாகவும், இதையடுத்து ஊர் கட்டுப்பாட்டின்படி, வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியினர் கூறுகையில், இதுவரை 2 முறை தேர்தல் நடத்தாமலேயே தலைவரை தேர்ந்தெடுத்து உள்ளோம். இந்த முறையும் அதே ரீதியில் தேர்ந்தெடுப்போம் என்றனர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ஊராட்சி தலைவர் பதவி ரூ.22.5 லட்சத்துக்கும், இன்னொருவர் ரூ.25 லட்சத்துக்கும் ஏலம் கேட்டார். உடன்பாடு ஏதும் ஏற்படாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆலம்பாடி ஊராட்சியை சேர்ந்த சொக்கநாதபுரம், செஞ்சேரி கிராமத்தினர் இந்த ஏலத்தை நடத்தினர். அதே நேரத்தில் ஆலம்பாடி கிராமத்தினரை இதில் சேர்க்கவில்லை. ஆலம்பாடி கிராமத்தினர் ஆதரவு இல்லாமல் நாம் ஜெயித்து விடலாம் என கருதி அந்த கிராமத்தை இவர்கள் புறக்கணித்து இந்த ஏலத்தை நடத்தி உள்ளனர். இந்த தகவல் ஆலம்பாடி மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் நேரடியாக ஏலம் நடந்த இடத்துக்கு வந்து விட்டனர். எங்களுக்கு தெரியாமல் எப்படி ஏலம் விடலாம். எங்களை சேர்த்துக்கொண்டு தான் ஏலம் நடத்த வேண்டும். அந்த தொகையில் எங்கள் கிராமத்திற்கும் பங்கு வேண்டும் என கேட்டனர். இதனால் ஏலத்தில் இன்னும் ஒரு முடிவு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுபோல பேரையூர் ஊராட்சி தலைவர் பதவி ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டதாகவும் உடன்பாடு ஏற்படாததால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனாதி ஊராட்சி தலைவர் பதவி: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், ஏனாதி பஞ்சாயத்தில் பூக்குளம், கொட்டகை, தேவர்புரம், பொந்தம்புலி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. 6 வார்டுகள் உள்ள இந்த பஞ்சாயத்தில் சுமார் 1,300 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஏனாதி கிராமத்ைத சேர்ந்த சுந்தரமூர்த்தி, பாரதிராஜா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில் சுந்தரமூர்த்தி 84 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் கடந்தாண்டு உயிரிழந்தார். தற்போது ரூ.10 லட்சம் கொடுப்பவரைத்தான் ஊராட்சி தலைவராக தேர்வு செய்ய வேண்டுமென ஊர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு இப்பகுதி இளைஞர்கள் புகார் அனுப்பியுள்ளனர். ஏலம் மூலம் ஊராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஏனாதி ஊராட்சி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏனாதியில் ஊர்க்கூட்டம் கூட்டி, தலைவர் பதவிக்கு போட்டியிட யாருக்கு விருப்பம் என கேட்கப்பட்டது. அப்போது ஒரு சிலர் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். அப்போது கடந்த முறை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த பாரதிராஜா, ‘எனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்’ என தெரிவித்தார். ஊராட்சியின் நலன் கருதி ஊர் மக்கள் அனைவரும் பாரதிராஜாவை தேர்ந்தெடுத்தனர். ஆனால் இதை விரும்பாத ஒரு சிலர், ஏனாதி ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.10 லட்சத்துக்கு ஏலம் போனதாக வதந்தி பரப்பி உள்ளனர். நாங்கள் ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்க உள்ளோம். யார் போட்டியிட்டாலும் வாக்களித்து திறமை உள்ளவர்கள் வெற்றி பெறட்டும்’’ என்றனர். இதுகுறித்து ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் கூறுகையில், ‘‘இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். ராமநாதபுரம் அருகே பனைக்குளம், கமுதி அருகே எருமைகுளம், கே.வேப்பங்குளம், புதுக்கோட்டை ஆகிய பஞ்சாயத்துகளிலும், குறிப்பிட்ட தொகை கட்டுபவரையே போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீடியோ எடுத்தவர் மீது தாக்குதல்

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா அரசலூர் கிராமத்தில், வார்டு உறுப்பினர் பதவி ஏலம் தொடர்பான பேச்சுவார்த்தை விவரங்களை, பணம் தருவதாக ஒப்புக்கொண்டவரின் அண்ணன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த ஊர்முக்கிய பிரமுகர்கள் எதற்காக வீடியோ எடுக்கிறாய் என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை விவரங்களுக்கு ஆதாரம் வேண்டாமா, நீங்கள் பணத்தை வாங்கி விட்டு இல்லை என்று சொல்லி விட்டால் யாரிடம் கேட்பது என்று கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதோடு, வீடியோ எடுத்தவரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் அனைவரும் சென்றுவிட்டனர். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு பேரம் பேசுவது, இருதரப்பினரிடையே கைகலப்பு, வாக்குவாதம் ஏற்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

3 ஆண்டுகளுக்கு முன்பே ஏலம் எடுத்தவருக்கே தலைவர் பதவி

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அய்யம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது.  கடந்த 3 ஆண்டுக்கு முன் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அய்யம்பட்டி கிராம ஊராட்சியில் உள்ள பதவிகளை கிராமத்தின் சார்பில் ஏலத்தில் விட்டனர். தலைவருக்கு ரூ.5 லட்சம், துணைத்தலைவருக்கு ரூ.1.50 லட்சம், வார்டு உறுப்பினர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் கட்டியவர்கள், போட்டியின்றி  தேர்தல் நடத்தாமல் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி அய்யம்பட்டி கிராம ஊராட்சி தலைவராக  தனலெட்சுமி அண்ணாதுரை, துணைத்தலைவராக ரவி, உறுப்பினர்களாக ஆட்டோ முருகன், செண்பகம், பாண்டியன், ராசு ஆகியோரை தேர்வு செய்து வைத்திருந்தனர். இதில் கிடைத்த ரூ.8.50 லட்சத்தை கிராமத்தின் சார்பில் பொதுவில் வைத்திருந்தனர். அப்போது தேர்தல் ரத்தானதால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவியேற்க முடியாமல் போனது. தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ள நிர்வாகிகளை பதவியில் அமர்த்த முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலுக்கு ஏற்ப தொகையை அதிகரித்து மறுபடியும் ஏலத்தில் விடலாம் எனவும் கிராமத்தில்  பேச்சு நடந்து வருகிறது.

Related Stories:

>