×

பொருளாதார மந்தநிலையால் சிறுசேமிப்பு திட்டத்தில் வட்டிவீதம் குறைகிறது

மும்பை: சிறு சேமிப்பு திட்டங்களில் பணம் போட்டு  அதில் வட்டியை எதிர்பார்ப்போர் பலர்; ஆனால், அந்த வட்டிக்கும் பொருளாதார மந்த நிலையால் ஆபத்து வந்து விட்டது.   பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள  முடியாமல்  அரசும் ரிசர்வ் வங்கியும் தவித்து வருகின்றன. இரண்டு அமைப்புகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் நிலைமை மாறவில்லை. அதனால் பல துறைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன; பல லட்சம் பேர் வேலை இழந்தனர்.  இந்நிலையில், வங்கிகள் மற்று நிதி நிறுவனங்கள் பாதிக்கப்படுவதால் நிதி நிலையை சீராக்க அரசின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைக்க மத்திய அரசிடம் ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது.

வங்கிகளைவிட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு வங்கிகளுக்கு வாராக் கடன் சுமை பெரும் பிரச்னையாக உள்ளது. இதைக் குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது. வங்கிகள் குறைந்தவட்டியில் கடன் கொடுத்தால் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதேவேளையில் நுகர்பொருள் விற்பனையும் அதிகரிக்கும். இதனை உறுதி செய்யவும் தனியார் நிதி நிறுவனங்கள் முதலீட்டுகளை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றிய சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவியேற்ற பின்னர், மற்ற கவர்னர்களைப்போல் அல்லாமல் இவர் அனைத்து துறைகளின் நிபுணர்களுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

வங்கியாளர்கள், என்பிஎப்சி நிபுணர்கள், பெரிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், சங்கங்கள், ஊழியர்கள் என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து ஆலோசனை கலந்து அவர்களின் கருத்துகளை கவனமாக கேட்டு வருகிறார். ரிசர்வ் வங்கி கவர்னர் தற்போது, மேக்ரோ மற்றும் மைக்ரோ அளவிலான பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார். இதனால்தான் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தால் அதன் பலன்கள் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் வங்கிகளும் வட்டி விகிதத்தை ரெப்போ வட்டி விகித்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.


Tags : downturn , Economic recession, minimization program
× RELATED 20 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்தநிலை