×

மும்பையில் இன்று கடைசி போட்டி: டி20 தொடரை கைப்பற்ற இந்தியா - வெ.இண்டீஸ் பலப்பரீட்சை

மும்பை: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்து திருவனந்தபுரத்தில் நடந்த 2வது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தி தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இரு அணிகளும் வரிந்துகட்டுகின்றன. இந்திய அணி பேட்டிங்கில் பெரிய பிரச்னை எதுவும் இல்லை.

முதல் 2 போட்டியிலும் கணிசமாக ரன் குவிக்கத் தவறிய தொடக்க வீரர் ரோகித் ஷர்மா, சொந்த ஊரில் பழைய பார்முக்கு திரும்புவார் என நம்பலாம். திருவனந்தபுரத்தில் 3வது வீரராகப் புரமோஷன் கொடுக்கப்பட்ட ஷிவம் துபே அதிரடியாக விளையாடி திறமையை நிரூபித்துள்ளார். இளம் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் மீதான நெருக்கடி தான் அதிகரித்துள்ளது. இவர் கடைசியாக விளையாடிய 7 சர்வதேச டி20 இன்னிங்சில் அதிகபட்சமாக 33* ரன் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. திறமை வாய்ந்த சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், பன்ட் சிறப்பாக செயல்பட்டால் தான் இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். பந்துவீச்சில் தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் அதிக ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். இவர்கள் துல்லியமாகப் பந்துவீசி வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது அவசியம்.

விக்கெட் வேட்டையில் பெரிதாக சாதிக்காத வாஷிங்டன் சுந்தர் (கடைசி 5 டி20ல் 3 விக்கெட்), பீல்டிங்கிலும் சொதப்புவது கேப்டன் கோஹ்லிக்கு தலைவலியை கொடுத்துள்ளது. இவருக்கு பதிலாக குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கொடுப்பது குறித்து அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்திய அணி திருவனந்தபுரத்தில் அடைந்த தோல்விக்கு பழிதீர்ப்பதுடன் தொடரையும் கைப்பற்ற முனைப்பு காட்டும் நிலையில், போலார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் எத்தகைய சவாலுக்கும் தயார் என வரிந்துகட்டுகிறது. அந்த அணியிலும் லூயிஸ், சிம்மன்ஸ், ஹெட்மயர், ஹோல்டர், போலார்டு என அதிரடி பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் உள்ளனர். காட்ரெல், வில்லியம்ஸ், ஹோல்டர், வால்ஷ் பந்துவீச்சும் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும்.
எனவே, சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல், ரிஷப் பன்ட், மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, சஞ்சு சாம்சன். வெஸ்ட் இண்டீஸ்: கெய்ரன் போலார்டு (கேப்டன்), பேபியன் ஆலன், பிராண்டன் கிங், தினேஷ் ராம்தின், ஷெல்டன் காட்ரெல், எவின் லூயிஸ், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஷிம்ரோன் ஹெட்மயர், கேரி பியரி, லெண்டில் சிம்மன்ஸ், ஜேசன் ஹோல்டர், ஹேடன் வால்ஷ் ஜூனியர், கீமோ பால், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

Tags : Mumbai ,India ,West Indies ,series , Mumbai, last match, India, West Indies
× RELATED மும்பையில் தனியார் நிறுவனங்களில்...