×

மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடரும் இழுபறி: அஜித் பவார் துணை முதல்வர் பதவி கேட்பதால் புது சிக்கல்

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சரவை மேலும் விரிவாக்கம் செய்வதில் இழுபறி நீடிக்கிறது. அஜித் பவார் தன்னை துணை முதல்வராக்க கட்சியினர் விரும்புவதாக கூறுவதால், அம்மாநில அரசியலில் புது சிக்கல்  ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா - என்சிபி - காங்கிரஸ் அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு வாரம் கடந்த பிறகும், அமைச்சரவை ஒதுக்கீடு தொடர்பாக புதிய சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன. கடந்த நவ. 28ம் தேதி சிவசேனா  தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்றவுடன் அவருடன் ஆறு அமைச்சர்கள் பதவியேற்றனர்.

அவர்களில் எவருக்கும் இதுவரை அமைச்சரவையில் இலாகா ஒதுக்கப்படவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக மூன்று கட்சிகளின் கூட்டணிக்குள் இன்னும் ஒருமித்த கருத்தை உருவாக்கவில்லை. இதற்கு முக்கிய காரணமாக ‘துணை  முதலமைச்சர்’ பதவி தொடர்பான இழுபறி நிலை நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘பட்நவிஸ் முதல்வராக பதவியேற்ற போது, என்சிபி தலைவர்  அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். அதன்பின் ஏற்பட்ட அரசியல் நகர்வுகளை தொடர்ந்து அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் என்சிபி கட்சிக்கே வந்துவிட்டார்.

தற்போது, என்சிபி கட்சி தரப்பில் அஜித் பவாரை துணை முதல்வராக மீண்டும் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதனால்தான், அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா ஒதுக்கீட்டில் குழப்பம் நீடித்து வருகிறது’ என்று  தெரிவித்தனர். இந்நிலையில், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் மற்றும் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் நேற்று முன்தினம் சோலாப்பூரில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் ஒன்றாகக் காணப்பட்டனர். இந்த சந்திப்பில்,  இவர்கள் மகாராஷ்டிர அரசியல் வானிலை குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தலைவர்களும் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.  இதுகுறித்து, ​​அஜித் பவார் கூறுகையில், ‘‘பட்நவிசுடனான சந்திப்பின் போது அரசியல்  பற்றி விவாதிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் அமரவேண்டி இருந்தது.

ஆனால் நாங்கள் ‘அரசியல் வானிலை’ குறித்து பேசவில்லை. கட்சி நிர்வாகிகள், துணை முதல்வராக பார்க்க விரும்புகிறார்கள். இது தொடர்பாக இறுதி முடிவை கட்சித் தலைவர் (பவார்) எடுப்பார். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக  முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முடிவு எடுப்பார்’’ என்றார். இதுகுறித்து, என்சிபி தேசிய செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ‘‘கட்சியும் அரசாங்கமும் அவரது (அஜித் பவார்) தலைமையில் பலம் பெறும். இந்த விஷயத்தில் இறுதி  முடிவு பவாரிடம் இருக்கும். அஜித் துணை முதலமைச்சராக மாறுவதை  எதிர்க்கவில்லை’’ என்றார்.



Tags : expansion ,Maharashtra Cabinet ,Ajit Pawar , Maharashtra Cabinet expansion continues: Ajit Pawar
× RELATED அப்போ கட்சி… இப்போ தொகுதி… சரத்பவார்...