×

ஸ்ரீபெரும்புதூரில் ஏரி உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியை உடைத்த மர்ம நபர்களை தண்டிக்கவேண்டும் என்று விவசாயிகள்  தெரிவித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வளர்புரம் கிராமத்தில் உள்ள சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வளர்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெற்று வருகிறது.  ஏரியில் 3 மதகு மற்றும் 2 கலங்கள் உள்ளன. கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக ஏரி நிரம்பியுள்ளது.இந்த நிலையில், நேற்று முன்தினம் ஏரிக்கரையின் ஒரு பகுதியை மர்ம நபர்கள் உடைத்துவிட்டதால் அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரும்புதூர் கோட்ட பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் மணிகண்டன் தலைமையில், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர்.

பின்னர் பொக்லைன் மூலம் ஏரிக்கரை உடைப்பை சரிசெய்து, தண்ணீர் வெளியேறுவதை தடுத்தனர். மணல் மூட்டைகளை அடுக்கி ஏரிக்கரையை சரிசெய்தனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பல வருடங்களுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் சந்தோஷமாக இருந்தோம். இந்த தண்ணீரை நம்பிதான் விவசாயம் செய்து வருகிறோம். ஏரிக்கரையை மர்ம நபர்கள் உடைத்துவிட்டதால் 25 சதவீதம் தண்ணீர் வீணாகிவிட்டது. எதற்காக ஏரிக்கரையை உடைத்தார்கள் என்று தெரியவில்லை. இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஏரிக்கரையை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏரிகளை அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும்’ என்றனர்.

Tags : Lake ,Sriperumbudur ,Lake Breaking , Lake breaking , Sriperumbudur, mystery figures
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...