×

ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு லட்சக் கணக்கில் ஏலம்: மக்களாட்சிக்கு எதிரானவையை தடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகள் ஏலம் விடப்படுவதை தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27  மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் வரும் 30ம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது.  இந்நிலையில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில் பணபலம் கொண்டவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியின்றி தேர்வு செய்யும் வகையில் பதவிகளை விலை கொடுத்து வாங்கும் போக்கு தொடர்ந்து நடக்கிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுகுப்பம் ஊராட்சியில் தலைவராக இருந்த அதிமுக பிரமுகரும், துணைதலைவராக இருந்த தேமுதிக பிரமுகரும், தற்போது தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. அதன்படி  நேற்று தலைவர் பதவிக்கான வேட்பு மனு வாங்குவதற்கு முன் அங்குள்ள ஒரு கோயிலில் கிராம மக்கள் ஒன்று கூடினர். இதில் ஊருக்கு கோயிலை யார்? கட்டி தருகின்றாரோ, அவரை தலைவராக தேர்வு செய்யலாம் எனக்கூறி விவாதம்  செய்துள்ளனர். கடந்த ஆண்டு தலைவர், துணைத்தலைவராக இருந்தவர்களே போட்டியிடலாம் என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் ஏலம் போனதாக தெரிகிறது. ஊராட்சி தலைவர் பதவி ஏலம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார். பிடிஓக்கள் சீனுவாசன், ரவிச்சந்திரன் நடுக்குப்பம் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைபோல், தமிழகத்தில் பல்லேறு இடங்களில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஏலம்  விடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகத்திற்கு ஊறுவிளைப்பதை தடுக்க தேர்தல்  அலுவலகர்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களாட்சி தத்துவத்திற்கு புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் மிகவும் வருந்தத்தக்கது. இதுபோன்ற செயல்களை மக்களாட்சிக்கு எதிரானவை என்பதனை மக்கள்  உணர செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Auction ,panchayat leader ,member posts Panchayat leader ,State Election Commission , Lakhs of bids for panchayat leader and ward membership: Order to prevent anti-democracy ... State Election Commission
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்