சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்க தடுக்க கோரிய வழக்கு: தமிழகத்தில் மணலை போல் தண்ணீர் மாஃபியா அதிகரித்துள்ளது...சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: சென்னை நங்கநல்லூர் மற்றும் பழவந்தாங்கல் பகுதிகளில் உள்ள வணிக நோக்கில் நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை தடுக்க கோரி இளையராஜா என்பவரும்; சென்னை கௌரிவாக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக  நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதை தடுக்க கோரி நாகேஸ்வர ராவ் என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு, வணிக நோக்கத்துக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறா அல்லது சொந்த தேவைக்காக எடுக்கப்படுகிறதா என்பது குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  வழக்கறிஞர் சந்திரகுமாரை ஆணையராக நியமித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவின்படி நேரில் ஆய்வு நடத்திய ஆணையர், தினமும் 250 முதல் 300 லாரிகளில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதாகவும், தண்ணீரை எடுக்க  விவசாயத்துக்காக வழங்கப்பட்ட இலவச மின்சாரம் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்துச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டும், அதை அமல்படுத்தாதது ஏன்  எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் எடுத்ததாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அதிகாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்,  வணிகவரித்துறை அதிகாரி உள்பட மூவருக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எச்சரிக்கை விடுத்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மணல் மாஃபியாவை போல் தண்ணீர் மாஃபியா அதிகரித்துள்ளதாக நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. மேலும், தண்ணீர்  திருட்டு தொடர்பாக ஆய்வு செய்து 8 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: