×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரிய அ.ம.மு.க..: கோரிக்கையை ஏற்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னம் ஒதுக்க வேண்டும் என அ.ம.மு.க. விடுத்த கோரிக்கையை ஏற்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, டிடிவி.தினகரன் தலைமையில் அமமுக கட்சி தொடங்கப்பட்டது. இக்கட்சியின் சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படாததால் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டனர். மேலும் தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்யாததால் சின்னம் பெறுவதில் சிக்கல்கள் எழுந்தன.

இந்நிலையில், அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி.தினகரன் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்த 2019 ஏப்.22ம் தேதி விண்ணப்பித்தார். இதற்கான ஆவணங்கள் அக்டோபர் மாதம் 24ம் தேதி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பெயரில் கட்சியை பதிவு செய்ய ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. தகுதியான ஆட்சேபம் எதுவும் இல்லாததால் எதிராக சிலர் வழங்கிய ஆட்சேபனை மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, அ.ம.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை கடந்த டிசம்பர் 7ம் தேதியன்று வழங்கியது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு கடிதத்தில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் 29வது பிரிவின் கீழ் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி பதிவு செய்யப்படுகிறது. இது நவம்பர் 25ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது, என குறிப்பிடப்படப்பட்டிருந்தது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சியாகிவிட்டதால், இனிமேல் அனைத்து தேர்தல்களிலும் பங்குகொள்ள முடியும், அதுபோல பொதுவான சின்னம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி மாநில தேர்தல் ஆணையத்திடம் அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை கட்சியின் பொருளாளர் வெற்றிவேல், தேர்தல் பிரிவு செயலாளர் சந்திரன், கட்சியின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் ஆகியோர் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் வழங்கினர். இந்த நிலையில், அமமுகவின் இந்த கோரிக்கையை ஏற்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன், அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்கக்கோரி மாநில தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தோம்; தனி சின்னம் கொடுக்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. எனவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என கூறியுள்ளார்.



Tags : AIADMK ,election ,Amamuka ,government ,Applied Public Symbol ...: State Election Commission , Local Elections, Public Charter, Amamuka , State Election Commission, TTVDinakaran
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ மகனிடம் ₹1.45 லட்சம் பறிமுதல்