இஸ்லாமாபாத்: அண்டை நாடுகளின் மதரீதியான விவகாரத்தில் தலையிடும் வகையில் தவறான, நல்லெண்ணமற்ற நோக்கத்தோடு குடியுரிமை திருத்த மசோதாவை இந்தியா கொண்டுவந்துள்ளது என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.