அதிக லைக் மற்றும் ரீ ட்வீட் பெற்ற பதிவு எனும் சிறப்பு: 51 மில்லியனை தாண்டிய பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றதையடுத்து பிரதமர் மோடி, பதிவிட்ட ட்விட்டர் பதிவு, இந்த ஆண்டில் அதிக லைக் மற்றும் ரீ ட்வீட் பெற்ற பதிவு எனும் சிறப்பைப் பெற்றுள்ளது. 2009-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த போது நரேந்திர மோடி தனது ட்விட்டர் கணக்கை தொடங்கினார். தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 43லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 51 மில்லியனை தாண்டியது.

இதன்மூலம் 111.6 மில்லியன் லட்சம் பேர் பின்தொடரும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் 67.4 மில்லியன் பேர் பின்தொடரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு பிறகு ட்விட்டரில் அதிகம் பேர் பின்தொடரும் பட்டியலில் மோடி 3-வது இடத்தை மீண்டும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்திய அளவில் நடப்பாண்டு அதிக கவனம் பெற்ற பதிவுகளின் விபரங்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்பையில் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வென்றதையடுத்து பிரதமர் மோடி பதிவிட்ட ட்வீட் அதிக லைக்ஸ் மற்றும் ரீ ட்வீட்டுகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

மேலும் இந்தியாவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட ஆண் அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அதிகம் பேசப்பட்ட ஆண் அரசியல் தலைவர்களில் ராகுல் காந்திக்கு 2-வது இடமும், அமித்ஷா 3-ம் இடத்திலும் உள்ளார். அதிகம் பேசப்பட்ட பெண் அரசியல் தலைவர்களில் ஸ்மிருதி இரானி முதலிடமும், பிரியங்கா காந்தி 2-வது இடத்திலும் உள்ளார். விளையாட்டுத்துறையை பொருத்தவரை எம்.எஸ் தோனி பிறந்த தினத்துக்கு விராட் கோலி வெளியிட்ட ட்விட்டர் பதிவு அதிகம் பேரால் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. சினிமா துறையை பொருத்தவரை, நடிகர் விஜய் பகிர்ந்திருந்த பிகில் பட போஸ்டர் பதிவு அதிக ரீட்வீட் செய்யப்பட்ட பதிவு எனும் சிறப்பை பெற்றுள்ளது.

ஹேஸ்டேக்குகளை பொருத்தவரை, மக்களவை எலெக்சன்ஸ் 2019 எனும் ஆங்கில ஹேஸ்டேக் முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து சந்திரயான் 2 எனும் ஹேஸ்டேக் உள்ளது எனவும் கூறியுள்ளது.

Related Stories: