உன்னாவ் சம்பவத்தை தொடர்ந்து உ.பி.யில் 218 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அம்மாநில அரசு முடிவு

லக்னோ: உன்னாவ் பெண் சம்பவத்தை தொடர்ந்து, உத்திரபிரதேசத்தில் 218 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டப் பெண்ணை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீயிட்டு எரித்தனர். அதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து, உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக மாநில அளவிலும் பெரிய அளவில் போராட்டங்கள் எழுந்தன. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கு அந்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

லக்னோவில் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 218 விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது.  இந்த 218 விரைவு நீதிமன்றங்களில் 144 நீதிமன்றங்கள் கற்பழிப்பு தொடர் வழக்குகளை விசாரிக்கவும், 74 நீதிமன்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் செய்து போக்சோ சட்டம் பாய்ந்த வழக்குகளை விசாரிக்கவும் அமைக்கப்பட உள்ளது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் மாமரம், வேப்பமரம் உள்ளிட்ட 32 மரங்களை வெட்டுவதற்கு அரசின் அனுமதியை கட்டாயமாக பெற வேண்டும் உள்ளிட்ட 32 முடிவுகளும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Related Stories: