திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் கேட்கீப்பர்களை நியமித்து ரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்

புதுக்கோட்டை: திருவாரூர்- காரைக்குடி ரயில் மார்க்கத்தில் கேட் கிப்பர்களை நியமனம் செய்து ரயிலின் வேகத்தினை அதிகரிக்க வேண்டும் என ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2009ம் ஆண்டில் ரயில் சேவையானது நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதைக்கான பணிகள் துவங்கின. இருப்பினும் ஆமை வேகத்தை விட மிகவும் குறைவாக நத்தை வேகத்தில் நடைபெற்று வந்த இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்களும், சேவை சங்கத்தினரும், அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து இந்த பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி இந்த ரயில் பாதையில் சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது.

அதன் பின்னர் ஜூன் 1ம் தேதி முதல் டெமு ரயில் சேவையாக 3 மாத காலத்திற்கு தொடங்கப்பட்டது. பின்னர் 3 மாத முடிவின் போது தினகரன் செய்தி எதிரொலி காரணமாக இந்த ரயில் சேவை நீட்டிக்கப் பட்டு தற்போது வரையில் நடைபெற்று வருகிறது. மேலும் திருவாரூரிலிருந்து காலை 8.15 மணியளவில் புறப்பட்ட இந்த ரயிலானது சென்னை பயணிகளின் வசதிக்காக தற்போது காலை 6 மணியளவில் புறப்பட்டு தொடர்ந்து மாங்குடி, மாவூர், திருநெல்லிக்காவல், ஆலத்தம்பாடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக மதியம் 12.30 மணியளவில் காரைக்குடியை சென்றடைகிறது. இதே போல் எதிர் மார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து மதியம் 2.30 மணியளவில் புறப்படும் இந்த ரயிலானது இரவு 9 மணியளவில் திருவாரூர் வந்தடைகிறது. மொத்தம் 152 கி.மீ தூரம் கொண்ட இந்த வழிதடத்தில் சுமார் 60 கி.மீ வேகத்தில் ரயில் சென்றால் கூட மொத்தம் இரண்டரை மணி நேரமே ஆகும் நிலையில் தற்போது இதற்கான பயண நேரம் என்பது சுமார் ஆறரை மணி நேரம் வரை ஆகிறது. இந்த ரயில் சேவை பொது மக்களிடையே வரவேற்பு இல்லாமல் இருந்து வருவதால் இந்த ரயிலின் வேகத்தினை அதிகரிக்க வேண்டும் என்று இந்த வழிதடத்தில் உள்ள ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கர் கூறுகையில், திருவாரூரில் இருந்து காரைக்குடி வரையிலான 152 கிலோ மீட்டர் தூரத்தில் மொத்தம் 72 ரயில்வே கேட்டுகள் உள்ளன. இந்த ரயில்வே கேட்டுகள் பெரும்பாலானவற்றில் கேட் கீப்பர் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த ரயிலிலானது மொபைல் கேட் கீப்பர்களை கொண்டு இயக்கப்படுகிறது. ஒவ்வொரு ரயில்வே கேட்டிலும் ரயில் நிறுத்தப்பட்டு கேட்டு மூடப்படுவதும் பின்னர் திறக்கப்படுவதும் காரணமாக 152 கிலோ மீட்டர் தூரத்தினை 7 மணி நேரம் வரையில் கடக்க வேண்டிய நிலையில் பயணிகள் இருந்து வருகின்றனர். எனவே கேட் கீப்பர்களை நியமித்து ரயிலின் வேகத்தினை அதிகரிக்க வேண்டும் என சென்னை பொது மேலாளரின் நேர்முக உதவியளர் பாலாஜி மற்றும் முதன்மை மேலாளர் அனந்தராமன் மற்றும் ரயில் இயக்க முதன்மை மேலாளர் சிவக்குமார் மற்றும் திருச்சி கோட்ட மேலாளர்ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இது வரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் பொதுமக்களிடம் ரயில் பயணம் என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் இந்தத் திட்டமானது ரூ ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டம் தற்போது வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்கும் வகையில் தென்னக ரயில்வே உடனடியாக இந்த வழித்தடத்தில் கேட் கீப்பர்களை நியமித்து ரயிலின் வேகத்தை அதிகரிப்பதுடன் பயண நேரத்தையும் குறைக்க வேண்டும் என ரயில் பயணிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: