×

முழு கொள்ளளவை எட்டியதால் 6 ஆண்டுகளுக்கு பின் மறுகால் பாயும் கண்மாய்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி வாகைகுளம் கண்மாய் 6 ஆண்டுகளுக்கு பின்னர் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது. மழையை நம்பி கிராம மக்கள் ஒன்றிணைந்து ரூ.10 லட்சத்திற்கும் மேல் செலவு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டதால் விரைவில் கண்மாய் நிரம்பி உள்ளது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, 3 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது என கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் 120 ஏக்கர் பரப்பளவில் வாகைக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம், நத்தம்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. அய்யனார் கோயில் பகுதியில் இருந்து 8வது கண்மாயாக வாகைகுளம் உள்ளது. இந்த கண்மாய்க்கு எஸ்.ராமலிங்கபுரத்தில் உள்ள கீழகுளம் கண்மாயில் இருந்து நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கண்மாயை கடந்த பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு செய்யாததால், கண்மாயின் உள் பகுதியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தது. இதனால் கடந்த 12 வருடங்களில் இருமுறை மட்டுமே கண்மாய் நிறைந்தது. இந்த நீரும் அடர்ந்து காணப்பட்ட கருவேல மரங்களால் உறிஞ்சப்பட்டதால் கண்மாய் விரைவில் வற்றியது. எனவே இப்பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

கண்மாய் முழுவதும் சீமை கருவேல மரங்கள் இருந்ததால், கண்மாய் முழுமையாக நிறைந்தாலும் விரைவில் வற்றிவிடும். எனவே சீமை கருவேல மரங்களை அகற்றி தரும்படி மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கிராம மக்களே ஒன்றிணைந்து அரசு அனுமதியுடன் கண்மாயை சுத்தப்படுத்த முடிவு செய்தனர். இதற்கு சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம் பகுதிகளை சேர்ந்த மூன்று ஊர் சாலியர் சமுதாய மக்களும், விசைத்தறி கூட உரிமையாளர்கள், மருத்துவ துணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர்கள் உதவியுடன் ரூ.10 லட்சம் மதிப்பில் 3 ஜே.சி.பி இயந்திரங்கள் உதவியுடன் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் 20 நாட்கள் நடந்தது. இதனை தொடர்ந்து இரண்டு வருடங்களும் போதி மழை பெய்யவில்லை. இதனால் மீண்டும் ஆங்காங்கே கருவேல மரங்கள் முளைத்தது. இந்த மரங்களும் அவ்வப்போது அகற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்தால் தற்போது கண்மாய் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேலும் கண்மாய் நிறைந்தும் நீர்வரத்து தொடர்ந்து உள்ளதால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மறுகால் பாய்ந்து வருகிறது. இது குறித்து அப் பகுதியை சேர்ந்த முத்துமணி கூறும்போது, இந்த பகுதியிலேயே அதிகமான பரப்பளவு கொண்டது வாகைக்குளம் கண்மாய். இந்த கண்மாய் நிறைந்தால் சுமார் 3 வருடங்களுக்கு சுற்றுப்புற கிராமங்களுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது. மேலும் சத்திரப்பட்டியை சுற்றியுள்ள சங்கரபாண்டியபுரம், நத்தம்பட்டி, அய்யனாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மிகுந்த பயனடையும். மேலும் மருத்துவ துணியை சுத்தப்படுத்த தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. கோடை காலங்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். கண்மாயில் நீர் இருந்தால் தொழிலுக்கும் பயன்படும் என்றார்.

Tags : Rajapalayam , Rajapalayam
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!