உரிமை... அதை பெறுவது நம் கடமை

உரிமை... இந்த வார்த்தையே அதற்கான அர்த்தத்தை ஆணித்தரமாக கூறி விடும். ஒரு மனிதன் தான் பாதிக்கப்படும் எந்த ஒரு சூழலிலும், தனக்கான உரிமையை விட்டு தரக்கூடாது. கேட்டோ, போராடியோ பெற வேண்டும். அல்லது அவனுக்காக பிறர் போராடி பெற்றுத்தர வேண்டும். கருத்து, மொழி, ஜாதி, சமூக அடிப்படையில் யாரையும் துன்புறுத்தக்கூடாது. இதைத்தான் மனித உரிமை வலியுறுத்துகிறது. இரண்டாம் உலகப்போரை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த அந்த சம்பவத்தால், உலகெங்கும் ஏராளமான அரசு மற்றும் தனிநபர் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. நாடுகள் பெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்தன. மிகப்பெரிய அந்த மனித பேரழிவுக்கு பின்னரே, மனித உரிமை குறித்து உலகளவில் விவாதிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டே (1946) ‘மனித உரிமை ஆணைக்குழு’ உருவாக்கப்பட்டது. 53 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு இக்குழுவானது, சர்வதேச அளவில் ஒரு குழுவை தோற்றுவித்தது. இக்குழு பரிந்துரையில் ‘அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்’ ஐ.நா சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பிரகடம் சமர்ப்பிக்கப்பட்ட டிசம்பர் 10ம் தேதியே, 1950ம் ஆண்டிலிருந்து ‘சர்வதேச மனித உரிமைகள் தினமாக’ அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.

மனித உரிமைகள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது. அவற்றை பார்ப்போமா?

அனைத்து மனிதர்களும் சமமானவர்கள். அவர்களுக்கு சமத்துவ உரிமை தரப்பட வேண்டும். அல்லது அவர்கள் பெறுவதற்கு வழி வகை செய்ய வேண்டும். ஒருவரை மொழியால், தொழிலால், சமூகத்தால் அவர்களை எக்காரணம் கொண்டும் வேற்றுமைப்படுத்த கூடாது. பாதுகாப்புடன் கூடிய சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஒருவரின் சுதந்திரத்தை தடுக்கவோ, அதை கிடைக்காமல் செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது.

உங்களுக்கு கீழ் ஒருவர் பணி புரிந்தாலும், அவரை அடிமையாக கருதக்கூடாது. அவருக்கான உரிமகளை கட்டாயம் கேட்க வேண்டும். குற்றம் செய்தவராக இருந்தாலும் அவரை கொடூரமான முறையில் தாக்கக்கூடாது. அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். ஏழை, பணக்காரர் பேதம் காட்டக்கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமமே. ஒருவருக்கு உரிமை மறுக்கப்பட்டால் சட்டத்தை நாடி பெற வேண்டும். முதலில் காவல்துறையை அணுக வேண்டும். அங்கு நியாயம் கிடைக்காதபோது நீதிமன்றங்களை நாடலாம். சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவும், நாடு கடத்தவும் யாருக்கும் உரிமை இல்லை. ஒருவரது தனிப்பட்ட அல்லது அந்தரங்க பிரச்னையில் யாரும் தலையிடக்கூடாது. அவர்களை எக்காரணம் கொண்டும் எதிர்வினையாற்றும் சொல்லை பயன்படுத்தி, மனதளவில் காயப்படுத்தக்கூடாது.

ஒரு நிகழ்வு தொடர்பாக தங்களது கருத்துக்களை யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. அதை எக்காரணம் கொண்டும் தடுக்கக்கூடாது. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்பிய கல்வி கற்க உரிமையுண்டு. ஆரம்பநிலை கல்வியாவது கற்றிருத்தல் அவசியம். இந்த விஷயத்தில் ஒவ்வொரு நாடும் தீவிர அக்கறை காட்ட வேண்டும். இடைநிற்றல் இருக்கவே கூடாது.

பிறரது உரிமையை மதித்து போற்ற வேண்டும். அதை கண்டிப்பாக ஏளனம் செய்யக்கூடாது. முடிந்தவரை அதற்காக உதவலாமே தவிர, உதாசீனப்படுத்த யாருக்குமே உரிமை இல்லை. இதைத்தான் மனித உரிமை பிரகடனம் வலியுறுத்துகிறது.

ஆகையால் உங்களுக்கான உரிமையை கேட்டு பெறுங்கள்.

Related Stories:

>