×

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பரபரப்பு: பண்ருட்டியை தொடர்ந்து தருமபுரி, ராமநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட பனைகுளம் என்ற ஊராட்சி மன்றத் தலைவர் பதவி விதிகளுக்கு புறம்பாக ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2012-ம் ஆண்டு உள்ளாட்சி மன்ற தேர்தல் நடக்கும் போது ஊராட்சி மன்ற தலைவர் பதவி 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சி மன்ற தேர்தல் அறிவிப்பின் போது 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் பேசப்பட்டதாகவும், அதற்கிடையில் தேர்தல் நின்று போனதால் அது இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 27 மாவட்டங்களில்  மட்டும் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களிலும்,  2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அடிமட்டம் வரை ஜனநாயகம் தழைத்தோங்கவே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.  ஆனால் இதனை குழி தோண்டி புதைக்கும் வகையில் பணபலம் கொண்டவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியின்றி  பதவிகளை விலை கொடுத்து வாங்கும் போக்கு தொடர்ந்து நடக்கிறது. ஊராட்சி ஒன்றியத்திலும் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலும் போட்டியிட நேற்று ஒருசிலர் மட்டும் மனுக்களை பெற்றுச்சென்றனர்.

இந்நிலையில் பனைகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வந்து 24 லட்சம் ரூபாய் பேசப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. வித்திமரத அள்ளி, திருமல்வாடி, கூக்குட்டமருதஅள்ளி, மணல் பள்ளம், பனைகுளம் ஆகிய 5 கிராம மக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பனைகுளம் அருகே பெட்ரோல் பங்க் நடத்திவரும் இம்மானுவேல் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த 24 லட்சம் ரூபாயை பொதுமக்கள் பொது செலவுக்குக்கு பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏனாதி கிராம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி கடந்த 8-ம் தேதி ரூ.5 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்றத் தேர்தலில் மோதலை தவிர்ப்பதற்காகவே பொது வேட்பாளரை தேர்ந்தெடுத்து உள்ளதாக ஊர்மக்கள்விளக்கமளித்துள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதற்கு ஏனாதி கிராம இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன எனவும் கூறப்படுகிறது.


Tags : Thrissur ,Ramanathapuram ,panchayat chief bids ,election ,Panruti ,panchayat chief , Election, Dharmapuri, Ramanathapuram, panchayat chief
× RELATED ராமநாதபுரத்தில் ரூ.90 லட்சம் கொடுத்து...