புவிவெப்பமடைதல் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்த அரசு பள்ளி மாணவிக்கு பரிசு

ஒரத்தநாடு: தஞ்சையில் பன்முகத்திறமை தேடல் போட்டி நடந்தது. இதில் தஞ்சை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து பன்முகத்திறமை தேடல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 5,520 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி அட்சயா பங்கேற்று புவி வெப்பமயமாதல் காரணங்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தார். இக்கட்டுரைக்கு தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழகம் சிறந்த ஆய்வுக்கட்டுரை என்று தேர்வு செய்து சான்றிதழ், பரிசு வழங்கியது.

இதுகுறித்து மாணவி அட்சயா, அவரது கல்வி வழிகாட்டி வேதியியல் ஆசிரியர் கதிரேசன் ஆகியோர் கூறியதாவது: உலகளவில் கார்பன்-டை-ஆக்ஸைடை அதிகளவு வெளியிடும் நாடுகளில் முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை இந்தியாவும் பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு இந்தியாவில் மட்டும் 300 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைடை இந்தியா வெளியிடுகிறது. அதிகமாக கார்பன் அளவு உபயோகிப்பதால் கரியமிலவாயு அதிகமாக உள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையாகிறது. நகரமயமாதல் என்ற நூதன மாற்றத்தாலும், வேதிக்கழிவு பொருட்கள் அதிகமானதாலும், தொழில்புரட்சி ஏற்பட்டதாலும், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதாலும், சுற்றுக்சூழல் மாசுபடுவதாலும் இத்தகைய ஆபத்தான சூழல் மனிதன் வசிக்கும் உலகுக்கு ஏற்பட்டுள்ளது.

இதை போக்க, தவிர்க்க ஐ.நா.வால் 1997ல் வெளியிடப்பட்ட கியோடா என்ற நெறிமுறைகளை பின்பற்றினால் புவிவெப்பமயமாதல் தடுக்கப்படும். இந்த நெறிமுறைகளில் உற்பத்தி அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் உற்பத்தியால் நச்சுத்தன்மை, வெளிப்பாடு குறைவாக இருக்க வேண்டும். இத்தகைய உற்பத்தியாளர்களுக்கு அரசு மானியத்தையும், உதவியையும் அதிகளவு வழங்க வேண்டும் என்று இந்த நெறிமுறையில் சொல்லப்பட்டுள்ளது. பயோ பிளாஸ்டிக் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை உபயோகிப்பதன் மூலமாகவும், ஹைட்ரஜன் மூலமாக வாகனங்களை இயக்குவதாலும், அதிகளவு வெப்பத்தை உமிழும் டங்ஸ்டன் இழைகளை கொண்ட பல்புகளை பயன்படுத்தாமல் இருப்பதாலும், வாகனங்களை குறைத்து நடக்கும் பழக்கத்தை அதிகமாக்குவதாலும், கார்பன் வெளியிடும் அளவை குறைக்க முடியும் என்றனர்.

Related Stories: