உளுந்தூர்பேட்டை அருகே மயானபாதை அமைக்க கோரி கிராம மக்கள் நூதன போராட்டம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது  கொரட்டங்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் வசித்து வரும் நிலையில். இந்த கிராமத்தில் மயானத்துக்கு செல்லும்  பாதை முறையாக அமைக்கப்படாத காரணத்தினால் இறந்தவர்களை எடுத்து செல்வதில்  கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் மயானத்துக்கு செல்லும்  பாதையில் உள்ள பட்டா இடத்தினை தற்போது அந்த கிராமத்தை சேர்ந்தவர் பயிர்  செய்வதற்காக உழவு ஓட்டி வைத்து இருந்தார். நேற்று அந்த  கிராமத்தை சேர்ந்த லட்சுமி அம்மாள் என்பவர் உயிரிழந்ததால் அவரின் சடலத்தை  சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம்  அடைந்த இறந்தவரின் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று சுடுகாடு செல்லும்  பாதையை சீரமைத்து நிரந்தர பாதை அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை  வலியுறுத்தி சுடுகாடு செல்லும் பாதையில் அமர்ந்து நூதன போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் கொரட்டங்குறிச்சி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது  குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருநாவலூர் போலீசார் மற்றும் உளுந்தூர்பேட்டை வருவாய் துறை அதிகாரிகள் போராட்டத்தில்  ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இறந்தவரின் சடலத்தை எடுத்து  செல்வதற்கு தற்காலிக பாதை அமைத்து கொடுத்தனர். இருப்பினும் தொடர்ந்து  இறந்தவர்களின் சடலத்தை எடுத்து செல்வதற்கு பிரச்னை ஏற்படாத வகையில்  நிரந்தரமாக சுடுகாடு பாதை அமைத்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: