தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் நாகையில் இருந்து மதுரைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்

நாகை: தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் நாகையில் இருந்து மதுரைக்கு தினசரி விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று நாகூர் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போர் நல சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாகூர் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போர் நல சங்கம் பொதுக்குழு கூட்டம் நாகையில் நடந்தது. தலைவர் மோகன் தலமை வகித்தார். கவுரவ தலைவர் ராஜமாணிக்கம் வரவேற்றார். பொருளாளர் பாலகிருஷ்ணன், செயலாளர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் கம்பன்அம்பிகாபதி கலந்து கொண்டார். தினசரி அதிகாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி அல்லது காரைக்காலில் இருந்து திருச்சிக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும். மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து மாலை 6.30 மணிக்கு பிறகு வேளாங்கண்ணி அல்லது காரைக்காலுக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும்.

தற்போது மாலை 4.30 மணிக்கு பிறகு மறுநாள் காலை தான் ரயில் வசதி உள்ளது. இதனால் வேளாங்கண்ணி, நாகை, நாகூர், காரைக்கால் மற்றும் திருநள்ளார் வருவோருக்கு ரயில் வசதி இல்லாமல் உள்ளது. பெங்களூர் நகரத்தில் இருந்து திருநள்ளார், நாகூர் மற்றும் வேளாங்கண்ணி வருவோர் மிக அதிகம் ஆனால் நீண்ட தூரத்தில் இருந்து வருவோர்க்கு நேரடியாக ஒரு விரைவு ரயில் வசதியும் இல்லை. எனவே நீண்ட தூர பயணத்துக்கு மக்கள் இரவில் கிளம்பி காலை சென்றடையும் விரைவு ரயிலில் பயணிக்கவே விரும்புகிறார்கள். ஆகவே இரு மார்க்கத்திலும் இரவில் கிளம்பி காலையில் வந்தடையுமாறு விரைவு ரயிலை நேரடியாக யஷ்வந்த்பூர் அல்லது ஹீப்ளிக்கு தினசரி இயக்க வேண்டும். மதுரை அல்லது மதுரை மார்க்கமாக தென் மாவட்டங்களுக்கு தினசரி விரைவு ரயில் இயக்க வேண்டும்.

இதுவரை நாகையில் இருந்து நேரடியாக மதுரைக்கு ஒரு ரயில் கூட கிடையாது. வண்டி எண் 56711 தினசரி டெமோ ரயிலை தஞ்சை வழியாக கோவைக்கு செல்லும் வண்டி எண். 12083 ஜன சதாப்தி அதி விரைவு ரயிலுக்கு இணைப்பு ரயிலாக மாற்ற வேண்டும். ரயில்வே வாரியத்தால் ஒப்புதல் பெற்ற பேரளம் -காரைக்கால் வழி திருநள்ளார் 23 கிலோ மீட்டர் அக ரயில்பாதை பணியை வருகிற ஜனவரியில் ஆரம்பித்து விரைவில் முடிக்க வேண்டும். காரைக்கால் முதல் திருவாருர் வரை மீதமுள்ள மின்மயமாக்கும் பணியை துரிதபடுத்த வேண்டும். நாகை- திருத்துறைபூண்டி புதிய பாதைக்கு தேவையான நிதியை ஒதுக்கி முடிக்க வேண்டும். திருவாரூர்- காரைக்குடி பாதை பணிகள் முடிந்தும் தேவையான கேட் கீப்பர்கள் போடாததால் ரயில்கள் இயக்காமல் மக்களுக்கு உபயோகமில்லாமல் உள்ளது. எனவே தேவையான பணியாளர்களை நியமித்து காரைக்குடி- சென்னை பகல் நேர மற்றும் இரவு நேர விரைவு ரயிலை திருவாருர் வழியாக தினசரி இயக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆலோசகர் ரவி, துணைத்தலைவர் முகம்மது தம்பி, இணை செயலாளர்கள் கோபிகுமார், சாரங்கபாணி மற்றம் பலர் கலந்து கொண்டனர். துணைத்தலைவர் முகம்மதுதாகா நன்றி கூறினார்.

Related Stories: