ஓசூர் பகுதியில் 2வது நாளாக முகாம்: 90 யானைகளையும் அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும்

ஓசூர்: ஓசூர் பகுதியில் 2வது நாளாக முகாமிட்டுள்ள 90 யானைகளை, அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து, 100க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வந்துள்ளன. ராகி பயிரை குறி வைத்து வந்துள்ள இந்த யானைகள், பல குழுக்களாக முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன. ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காப்புகாட்டில் கடந்த 3 நாட்களாக, இருபிரிவுகளாக 60 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் நேற்று காலை முதலே லிங்கனம்பட்டி, கருக்கம்பட்டி, தேவசமுத்திரம், மெட்டரை உள்ளிட்ட பகுதியில் மக்காச்சோளம், முட்டைகோஸ், ராகி பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின.

இதேபோல, சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 30க்கும் மேற்பட்ட யானைகள் ராமாபுரம், பீர்ஜேப்பள்ளி, கோபசந்திரம், ஆலியாளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. எனவே, 90 யானைகளையும் ஒருங்கிணைத்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, லிங்கனம்பட்டி, கருக்கம்பட்டி, சானமாவு உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் நேற்று மதியம் முதல் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘சானமாவு, ராமாபுரம் உள்ளிட்ட வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 30 யானைகள் மற்றும் ராயக்கோட்டை உள்ளிட்ட வனப்பகுதியில் உள்ள 60 யானைகள் என மொத்தம் 90 யானைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேலும், கிராம மக்கள் அதிகாலையில் வனப்பகுதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம், வயல்களில் தனியாக காவலுக்கு இருக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து வருகிறோம்,’ என்றனர்.

Related Stories: