×

33 ஆண்டுகளுக்கு முன் நாகை வந்தவர் மாயமானார்: கணவரை கண்டு பிடித்து தரக்கோரி கலெக்டரிடம் இலங்கை பெண் மனு

நாகை: 33 ஆண்டுகளுக்கு முன் நாகை வந்த கணவர் மாயமானதால் அவரை கண்டுப்பிடித்து தரக்கோரி நாகை கலெக்டரிடம் இலங்கை பெண் மனு அளித்தார். இலங்கை திரிகோணமலை பாலையூத்தை சேர்ந்தவர் வசந்தி (57). இவர், நாகை கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்த முகமதுயூசுப் (60). திரிகோணமலையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1979ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் கடந்த 1986ம் ஆண்டு, நாகூரில் வசிக்கும் தனது உறவினர்களை சென்று சந்தித்து விட்டு வருவதாக முகமதுயூசுப் தமிழகம் வந்தார். அதன் பின்னர் அவர் என்னிடம் பேசவில்லை. இதையடுத்து நான் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

தமிழகம் வந்த எனது கணவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் எனது மகன் வசந்தன், (34) மகள் உஷா (32) ஆகியோரை வளர்த்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தேன். இந்நிலையில் காலங்கள் கடந்தும் இதுவரை எனது கணவர் திரும்பி வரவில்லை. எனக்கும் வயதாகி கொண்டேயிருப்பதால் கடந்த 3ம் தேதி தமிழகம் வந்து நாகூரில் பல இடங்களில் எனது கணவரை தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனவே எனது கணவரை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் பிரவீன் பி நாயர் அறிவுறுத்தல் படி, கணவரை கண்டுபிடித்து தரக்கோரி எஸ்.பி.,அலுவலகத்தில் வசந்தி மனு அளித்தார்.

Tags : Sri Lankan ,collector , Sri Lanka, Woman, Petition
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!