சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: இதுவரை 73 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் வருவாய் இதுவரை 73 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். முந்தைய வருடங்களை விட இவ்வருடம் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் காணப்படுகிறது. இவ்வருடம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கோயில் வருமானமும் அதிகரித்துள்ளது.

மண்டல பூஜைக்காக நடை திறந்த கடந்த 16ம் தேதி முதல் இதுவரை கோயிலுக்கு கிடைத்த மொத்த வருமானம் ரூ.73 கோடி கோடி ஆகும். கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.35.76 கோடி வருமானம் கிடைத்தது. கடந்த ஆண்டு இடைக்கால கட்டத்தில் 43 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்த நிலையில் இந்த ஆண்டு அதன் அளவு ஏறக்குறைய இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு போராட்டங்களால் ஐயப்பனை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. ஆனால் தற்போதைய சூழல் மிகவும் அமைதியாக உள்ளதாகவும், பக்தர்களுக்கு எந்த கட்டுபாடுகளும் விதிகப்படவில்லை என்பதால் இந்த ஆண்டு சபரிமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வரும் நாட்களில் சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கடந்த வருடத்தை விட இவ்வருடம் கோயில் வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கடந்த சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு பதிலாக ஒரு மணிநேரம் முன்னதாக 3 மணிக்கும், மாலை 4 மணிக்கு பதிலாக 3 மணிக்கும் நடை திறக்கப்பட்டது. இதேபோல இரவு 11 மணிக்குப் பதிலாக 11.45 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

Related Stories: