ஊரக உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 3,217 பேர் மனுதாக்கல்

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 3,217 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் இந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக மீத முள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து இதற்கான அறிவிக்கையை மாநில தேர்தல் ஆணையம் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதன்படி, இம்மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. வரும் டிச.16-ம் தேதி மனுத்தாக்கல் நிறைவடைகிறது.  அதன்படி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,834 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 333 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர். அதேபோல் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 47 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: