நீண்ட, விரிவான விவாதத்துக்குப்பின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேறியதற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு மூலமாக குடியுரிமை (திருத்தம்) மசோதா, 2019 பலத்த அமளிக்கிடையே மக்களவையில் நள்ளிரவில் நிறைவேறியது. இரவு 11.30 மணிக்குப் பின்னரும் மக்களவையில் மசோதா குறித்த விவாதம் கடுமையாக நீடித்தது. மசோதா நிறைவேறக்கூடாது என எதிர்க்கட்சிகள் விடாப்பிடியாக இருந்தன. அனல் பறந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகளுக்கு சரமாரியாக பதிலளித்து 11.35க்கு தனது உரையை அமித்ஷா, ‘‘மோடி அரசுக்கு அரசியலமைப்பு மட்டுமே மதம். தேசிய குடிமக்கள் பதிவேடு வருகிறது’’, எனக் குறிப்பிட்டு முடித்தார்.

அதையடுத்து 11.41க்கு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து எதிர்ப்புகள் வீணான நிலையில், நள்ளிரவு 12.02 மணிக்கு 311 எம்.பிக்கள் ஆதரவுடன் குடியுரிமை சட்ட திருந்த மசோதா நிறைவேறியது. குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேறியதற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இம்மசோதா மீது விவாதத்தின் போது நன்றாக விளக்கம் அளித்ததாகவும் அமித் ஷாவுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; விரிவான விவாதத்திற்குப் பிறகு, குடியுரிமை (திருத்த) மசோதா, 2019-ஐ மக்களவையில் நிறைவேற்றியது மகிழ்ச்சியளிக்கிறது.

மசோதாவை ஆதரித்த பல்வேறு எம்.பி.க்கள் மற்றும் கட்சிகளுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த மசோதா இந்தியாவின் பல  நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. மேலும் மனிதாபிமானங்களுக்கு மதிப்பளிக்கிறது. குடியுரிமை (திருத்த) மசோதா, 2019 இன் அனைத்து அம்சங்களையும் தெளிவாக விளக்கியதற்காக உள்துறை மந்திரிஅமித்ஷாவை நான் சிறப்பாகப் பாராட்ட விரும்புகிறேன். மக்களவையில் நடந்த விவாதத்தின் போது அந்தந்த எம்.பி.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் விரிவான பதில்களை அளித்தார் என்று கூறியுள்ளார்.

Related Stories: