டிஷா கொலை வழக்கு விசாரணை 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு: சடலங்களை பாதுகாப்பாக வைக்க நீதிமன்றம் உத்தரவு

திருமலை: கால்நடை பெண் டாக்டர் டிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொலை வழக்கில்  வழக்கு விசாரணை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை 13ம் தேதி வரை பாதுகாப்பாக வைக்கவும் உத்தரவிட்டது.   தெலங்கானா மாநிலத்தில், பெண் டாக்டர் டிஷா கொலை வழக்கு குற்றவாளிகள் என்கவுன்டர் விவகாரம் உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் தெலங்கானா மாநில அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் பிரசாத் அரசு தரப்பு வாதத்தை முன் மொழிந்தார். என்கவுன்டர் விவகாரம் குறித்து மாநில அரசு ராட்சகொண்டா காவல்துறை ஆணையாளர் மோகன் பகவத் தலைமையில்  சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து இருப்பதாகவும், எனவே வரும் 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு நீதிபதிகள் முதலில் என்கவுன்டர்  குறித்து  போலீசார் மீது 302 வழக்கு தொடரப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து முதல் தகவல் அறிக்கை நகல்  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த வழக்கை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.   மேலும் என்கவுன்டரில் உயிரிழந்த 4 குற்றவாளிகளின் உடல்களை மகபூப்நகர் மருத்துவக் கல்லூரியில் இருந்து எடுத்து வந்து ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் 13ம் தேதி வரை  பதப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டார்.

Related Stories: