பாஜ அரசால் பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டுத்தருவோம்: ராகுல் காந்தி உறுதி

பட்ககான்: ``பாஜ அரசால் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டு கொடுப்போம்’’ என ஜார்கண்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உறுதியளித்தார். ஜார்க்கண்டில் 3ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பட்ககான் பகுதியில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசியதாவது:  ஜார்கண்டில் காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மேலும் பாஜ ஆட்சியில் கட்டாயப்படுத்தி பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிலம், நீர், இடங்கள் உள்ளிட்டவை மீட்டுக்கொடுக்கப்படும். பாஜ ஆட்சியில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்டை மாநிலமான சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று இங்கும் விவசாயக் கடன் ரத்து செய்யப்படும்.  மேலும், ஜார்கண்டில் நிலங்களை இழந்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும். விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2,500 ஆக நிர்ணயிக்கப்படும். சட்டீஸ்கரில் காங்கிரஸ் அரசு நெல்லுக்கான கொள்முதல் விலையை 2,500 என நிர்ணயித்துள்ளது.  இதே கொள்முதல் விலையை இங்குள்ள விவசாயிகளுக்கு வழங்க காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து தேர்தலில் வெற்றி பெறச்செய்யுங்கள்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: