×

நிதி செலவு செயலாளர், இணை செயலாளர் பணியிடம் காலி மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கு உயரதிகாரிகள் இல்லாத அவலம்: கையை பிசையும் அதிகாரிகள்

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணியில், முக்கிய முடிவுகளை எடுக்கும் உயரதிகாரிகள் இருவர் இல்லாததால், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 2வது முறையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து கடந்த ஜூலையில் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 2வது காலாண்டில் நான்கரை சதவீதமாக சரிவடைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஜூன் மாதத்தில் ஜிடிபி 5 சதவீதமாக சரிவடைந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவாக கூறப்பட்டது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது. அக்டோபர் மாதத்தில் சிமென்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட 8 முக்கிய தொழில்துறை நிறுவனங்களின் வளர்ச்சி 5 புள்ளி 8 சதவீதமாக குறைந்துள்ளது.

 இவ்வாறாக நாட்டின் உள்நாட்டு உற்பத்தி கடும் சரிவை சந்தித்துள்ளதால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இதற்கிடையே, வரும் 2020 பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யவுள்ள 2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணியில் மத்திய நிதியமைச்சகம் இறங்கி உள்ளது. இந்நிலையில், நிதியமைச்சக செலவுச் செயலாளரைத் தவிர, முழு பட்ஜெட் தயாரிக்கும் பணியின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான இணைச் செயலாளர் (பட்ஜெட்) பதவியும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் காலியாக உள்ளது. இதனால், முக்கிய முடிவுகள் எடுப்பதில் மத்திய நிதியமைச்சகத்தில் தாமதங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரில் புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசத்தின் முதல் லெப்டினன்ட் கவர்னராக ஜி.சி.முர்மு நியமிக்கப்பட்ட பின்னர் செலவுச் செயலாளர் பதவி காலியாகிவிட்டது.

முர்மு அக்.29ம் தேதி தனது செலவுச் செயலாளர் பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், செலவுத் துறையின் அதிகாரியான அதானு சக்ரவர்த்திக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சக்ரவர்த்தி, நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகார செயலாளராக உள்ளார். முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையில் (டிஐபிஏஎம்) ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றிய பின்னர், சக்ரவர்த்தி இந்த ஆண்டு ஜூலை மாதம் பொருளாதார விவகார செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, 2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு குறித்த ஆலோசனையை அக்டோபரில் நிதியமைச்சகம் தொடங்கிய நிலையில், பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களுடனான தொடர் சந்திப்பு கூட்டத்தை கடந்த மாதம் முடித்துக் கொண்டது. 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகள் தற்காலிகமாக இறுதி செய்யப்பட்ட நிலையில், செலவுச் செயலாளர் மற்ற செயலாளர்கள் மற்றும் நிதித்துறை ஆலோசகர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.




Tags : Expenditure Secretary ,Joint Secretary Workspace ,Federal Budget Production Puh , Financial Expenditure Secretary, Joint Secretary, Federal Budget
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...