குடியுரிமை சட்ட திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல: மக்களவையில் அமித்ஷா விளக்கம்

புதுடெல்லி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, மக்களவையில் நேற்று தாக்கல் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இது சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல, ஊடுருவல்காரர்களுக்கு எதிரானது’ என விளக்கம் அளித்தார்.  பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், ஜெயின்கள், பார்சி இனத்தவர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என கடந்த 2 மக்களவை தேர்தலிலும் பா.ஜ வாக்குறுதி அளித்திருந்தது. இவர்கள் அனைவரும் அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களை சந்தித்ததால் இந்தியாவில் குடியேறிவர்கள். இது போன்று வெளிநாட்டில் இருந்து வரும் அகதிகள் 11 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்திருந்தால் மட்டுமே முன்பு குடியுரிமை வழங்கப்பட்டது. இதில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளான முஸ்லிம் அல்லாத அகதிகள், 5 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால், அவர்கள் குடியுரிமை வழங்கும் விதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களில் யாராவது சட்ட விரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் இந்தியாவில் வழக்கை சந்தித்திருந்தால், அவர்களுக்கு இந்த மசோதா பாதுகாப்பு அளிக்கும். இந்த மசோதா குறிப்பிட்ட ஒரு மதத்தை புறக்கணிப்பதாக உள்ளதாகவும், மத ரீதியிலான நாட்டை உருவாக்க பாஜ முயற்சிப்பதாகவும் பல்வேறு மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், வெளிநாடுகளில் இருந்த வந்த அகதிகளை, வடகிழக்கு மாநிலங்களில் குடியமர்த்த பா.ஜ முயற்சிப்பதாக அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர்.  இந்நிலையில், மக்களவையில் ஓட்டெடுப்பு நடத்தி குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 293 எம்.பி.க்களும், எதிராக 82 எம்.பி.க்களும் வாக்களித்தனர். மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவது அரசியல் சாசன சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதிர் ரஞ்சன் சவுத்ரி, சவுகதா ராய், பிரேம் சந்திரன், சசிதரூர், ஒவைசி ஆகியோர் கூறினர்.

மக்களவையில் இந்த மசோதாவை நேற்று தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:  நாட்டை காங்கிரஸ் கட்சி மதரீதியாக பிரித்தது. அதனால்தான் இந்த மசோதா கொண்டு வருவது அவசியம்.  இது எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மதரீதியான துன்புறுத்தல்களை சந்தித்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு, இந்த மசோதா இந்திய குடியுரிமை வழங்குகிறது. இவர்களுக்கு குடியுரிமை வழங்க முன்பே சட்டங்கள் உருவாக்கப்பட்டது. 1971ம் ஆண்டில் வங்கதேசம் பிரிந்த பின்பும், உகாண்டாவில் இந்தியர்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னும், அரசியல் சாசன விதிமுறைகளுக்கு உட்பட்டு இவர்களுக்கு குடியுரிமை வழங்க சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மசோதா சிறுபான்மையிலனருக்கு .001 சதவீதம் கூட எதிரானது அல்ல. இது ஊடுருவல்காரர்களுக்கு எதிரானது.

இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இது கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிக்கையில் பா.ஜ.வால் அளிக்கப்பட்ட வாக்குறுதி. இந்த நடவடிக்கைக்கு நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் ஒப்புதல் உள்ளது. டுருவல்காரர்களையும், அகதிகளையும் வேறுபடுத்தி ஆக வேண்டும். குடியுரிமை சட்ட திருத்த மசோதா யாருக்கு எதிராகவும் பாகுபாட்டுடனும் இல்லை. யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

நள்ளிரவு நிறைவேறியது

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு மூலமாக குடியுரிமை (திருத்தம்) மசோதா, 2019 பலத்த அமளிக்கிடையே மக்களவையில் நள்ளிரவில் நிறைவேறியது. இரவு 11.30 மணிக்குப் பின்னரும் மக்களவையில் மசோதா குறித்த விவாதம் கடுமையாக நீடித்தது. மசோதா நிறைவேறக்கூடாது என எதிர்க்கட்சிகள் விடாப்பிடியாக இருந்தன. அனல் பறந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகளுக்கு சரமாரியாக பதிலளித்து 11.35க்கு தனது உரையை அமித்ஷா, ‘‘மோடி அரசுக்கு அரசியலமைப்பு மட்டுமே மதம். தேசிய குடிமக்கள் பதிவேடு வருகிறது’’, எனக் குறிப்பிட்டு முடித்தார். அதையடுத்து 11.41க்கு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து எதிர்ப்புகள் வீணான நிலையில், நள்ளிரவு 12.02 மணிக்கு 311 எம்.பிக்கள் ஆதரவுடன் குடியுரிமை சட்ட திருந்த மசோதா நிறைவேறியது.

போராட்டம்:

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். அசாம் எம்.பி பத்ரூதீன் கூறுகையில், ‘‘இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இந்த மசோதா எதிரானது’’ என்றார். டெல்லி ஜந்தர் மந்தரில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியது. மேலும், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ேநற்று போராட்டங்கள் நடைபெற்றது.

சசிதரூர் நோட்டீஸ்:

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக, மக்களவை அலுவல் நடைமுறை 72ம் விதியின் கீழ் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் நேற்று காலை நோட்டீஸ் வழங்கினார். அதில் அவர் கூறியிருந்ததாவது: இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் உட்பட சட்டத்தின் முன் அனைவரும் சமம், அனைவருக்கும் சமமான பாதுகாப்பு என்ற அடிப்படை உரிமை விதிமுறையை குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீறுகிறது. 6 மதங்களைச் சார்ந்தவர்கள் மட்டும் குடியுரிமை பெறவும், மற்ற மதங்களைச் சார்ந்தவர்களை தவிர்க்கும் வகையிலான மத பாகுபாட்டுடன் இந்த மசோதா உள்ளது. இது குறித்து அவையில் முழு அளவிலான விவாதம் நடக்க சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

Related Stories: